தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன்: ரஷ்யாவின் 28 ஏவுகணைகளையும் 15 ஆளில்லா வானூர்திகளையும் வீழ்த்தினோம்

2 mins read
e7abc7f2-b5c6-4681-b8f5-3bde18a0f962
பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதாக கியவ் நகர மேயர் விடாலி லிட்ஸ்சோக் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ் 

கியவ்: உக்ரேன் மீது இரவு நேரத்தில் ரஷ்யா பாய்ச்சிய 28 ஏவுகணைகளையும் வீழ்த்திவிட்டதாக உக்ரேன் தெரிவித்தது.

அத்துடன், ரஷ்யா அனுப்பிய 16 ஆளில்லா வானூர்திகளில் 15 வானூர்திகளை வீழ்த்திவிட்டதாகவும் உக்ரேனிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் வெளிரி ஸாலுசைனி புதன்கிழமை கூறினார்.

தலைநகர் கியவ்மீது புதன்கிழமை காலை நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிட்டனர். கியவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேன் இப்படி தெரிவித்த வேளையில், உக்ரேனின் பல பகுதிகளில் அந்த நாட்டுக்குச் சொந்தமான பல ஆளில்லா வானூர்திகளைத் தான் வீழ்த்திவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்தது.

கருங்கடலில் உக்ரேனிய போர்ப்படகுகளைத் தாக்கி பத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொன்றுவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்தது.

உக்ரேன்மீது ரஷ்யா கடந்த 18 மாதகாலமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரேனின் கெர்சன் வட்டாரத்தைப் பிடித்திருந்த ரஷ்யா அதன் பெரும்பகுதியைவிட்டு வெளியேறிவிட்டது. போகும்போது ரஷ்யா கண்ணிவெடிகளையும் இதர சாதனங்களையும் புதைத்துவைத்துவிட்டுப் போய்விட்டது.

அந்த வெடிகள் ஒரு திடலில் வெடித்ததால் மூவர் கொல்லப்பட்டதாக கெர்சன் வட்டாரத்தின் ஆளுநர் புரோகுடின் தெரிவித்தார்.

ரஷ்யப் படைகள் புதைத்து இருக்கும் கண்ணிவெடிகள் பெரும் பிரச்சினையாக இருப்பதாக அவர் கூறினார்.

அண்மைய வாரங்களில் உக்ரேன் ஆளில்லா வானூர்திகளை அதிகம் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு உள்ளே இருக்கும் இலக்குகளைக் குறிவைத்து தாக்கத் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்