தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரபரப்பான சாலையில் நடைபோட்ட காட்டரசனால் மக்கள் பேரச்சம்

1 mins read
914f4764-94de-4146-a60d-77754441f07b
கராச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சுற்றித் திரிந்த சிங்கம். - காணொளிப்படம்: டுவிட்டர்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில், போக்குவரத்துமிக்க சாலையில் சிங்கம் ஒன்று நடைபோட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை உச்ச வேளையில், சிங்கத்தின் உரிமையாளர் அதனைத் தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றபோது, அது தப்பித்து, சாலையில் புகுந்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிகாரிகள் அதனைப் பிடித்துவிட்டனர்.

“தகவலறிந்ததும் எமது குழுக்கள் விரைந்து சென்று, சிங்கத்தைப் பிடித்தனர். இனி அச்சப்படத் தேவையில்லை,” என்று வனத்துறை ஆய்வாளர் முக்த்யார் சூம்ரோ கூறினார்.

சாலையில் சிறிது நேரம் சுற்றித் திரிந்தபின், ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அச்சிங்கம் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாலையில் சிங்கம் நடமாடியதை அடுத்து, ஊடகத்தினரும் பொதுமக்களும் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கம் பிடிபட்டதைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டு, அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் சிங்கத்தைச் செல்லப் பிராணியாக வளர்ப்பது வழக்கமானதுதான் எனக் கூறப்படுகிறது.

அங்கு பெருஞ்செல்வந்தர்கள் பலர் தனியார் வனவிலங்குக் காட்சியகங்களை நடத்தி வருகின்றனர். சில வேளைகளில் அவர்கள் பொதுமக்கள் காண்பதற்காக வனவிலங்குகளை அணிவகுத்து நடத்திச் செல்வதும் உண்டு.

குறிப்புச் சொற்கள்