வாஷிங்டன்: உணவுப் பட்டியலில் பெரியதாகத் தோன்றும் ‘பர்கர்’ உண்மையில் அளவில் சிறியதாக உள்ளது எனக் கூறி, விரைவுணவுக் குழுமமான ‘பர்கர் கிங்’மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ரொட்டிக்குள் வைக்கப்படும் இறைச்சித் துண்டும் மற்றப் பொருள்களும், ரொட்டிக்கு வெளியே தெரியும் வகையில் பெரிதாகக் காட்டப்பட்டு, வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துவதாக முறையீட்டாளர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “மனுதாரரின் கூற்றுகளில் உண்மை இல்லை,” என்று பர்கர் கிங் தெரிவித்ததாக ‘பிபிசி’ செய்தி வெளியிட்டுள்ளது.m
மெக்டோனல்ட்ஸ், வெண்டிஸ் விரைவுணவுக் குழுமங்களும் இதேபோன்ற வழக்குகளை எதிர்நோக்குகின்றன.
பர்கர் கிங் நிறுவனத்தின் ‘வாப்பர்’ பர்கர் உண்மையான அளவைக் காட்டிலும் 35% பெரியதாகக் காட்டப்படுகிறது என்பது மனுதாரரின் குற்றச்சாட்டு.
முன்னதாக, படத்தில் இருப்பதுபோன்ற அளவிலேயே பர்கரை விற்க வேண்டியதில்லை என்று பர்கர் கிங் வாதிட்டது.
இந்நிலையில், “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் கூறட்டும்,” என்று மாவட்ட நீதிபதி ராய் ஆல்ட்மன் தமது உத்தரவில் கூறியுள்ளார்.
அதே வேளையில், பர்கர் கிங் தனது தொலைக்காட்சி, இணையவழி விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துகிறது என்ற மனுதாரரின் கோரிக்கையை திரு ஆல்ட்மன் தள்ளுபடி செய்தார்.


