ஜெருசலம்: ஜெருசலத்தில் உள்ள இலகு ரயில் நிலையத்தில் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய பாலஸ்தீன இளைஞனை இஸ்ரேலியக் காவல்துறை அதிகாரி புதன்கிழமை மாலை சுட்டுக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையிலான பூசலில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
“சந்தேகநபர் ஷிவ்டெவ் இஸ்ரேல் இலகு ரயில் நிலையத்தில் கத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினார்,” என்று இஸ்ரேலியக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
எல்லைக்காவல் அதிகாரி ஒருவர் ரயிலில் பயணம் சென்று கொண்டிருக்கையில் தாக்குதலை நேரடியாகப் பார்த்ததாகவும், உடனே ரயிலிலிருந்து இறங்கி சந்தேகநபரைச் சுட்டதாகவும் தெரிய வருகிறது.
தாக்குதல் நடத்திய இளைஞன், கிழக்கு ஜெருசலத்தில் உள்ள பெயிட் ஹனினா பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அந்த இளைஞனுக்கு 14 வயது என்றும் காவல்துறை பேச்சாளர் டீன் எல்ஸ்டன் தெரிவித்தார்.
ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட ஆடவர் 25 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவர் முதுகில் குத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது.
சம்பவம் நடந்த ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளும், வெள்ளை சட்டையும் கறுப்பு மேல்சட்டையும் அணிந்திருந்த யூதர்கள் பலரும் கூடியிருந்ததாகவும் ஏஎப்பி செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதல் மேற்கொண்ட இளைஞனின் உடல் ஒரு போர்வைக்கு அடியில் கிடந்தது. இரத்தக் கறைகளும் தென்பட்டன.
அந்த இளைஞன், ரயில் நிலையத்தில் “வீரச்செயல்” புரிந்ததாக காசா பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் கூறியது.
அனைத்துலகச் சட்டப்படி, கிழக்கு ஜெருசலம் ஆக்கிரமிக்கப்பட்ட வட்டாரமாகக் கருதப்படுகிறது. சுமார் 230,000 இஸ்ரேலியர்களும் குறைந்தது 360,000 பாலஸ்தீனர்களும் அங்கு வாழ்கின்றனர். இந்த வட்டாரத்தைத் தங்களது எதிர்காலச் சுதந்திர தேசத்தின் தலைநகரமாக்க பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை 2014 முதல் முடக்கத்தில் உள்ளது.
இந்த ஆண்டு மட்டும், இதுவரை குறைந்தது 223 பாலஸ்தீனர்களும், 31 இஸ்ரேலியர்களும், ஓர் உக்ரேனியரும், ஓர் இத்தாலியரும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.