ஈப்போ: மலேசியாவின் கேமரன் மலையில் விளையும் தக்காளி, மிளகாய், குடமிளகாய் போன்ற காய்கறிகளின் விலைகள் கூடிய விரைவில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு வரை உயரவுள்ளன.
தொடர்ந்து நீடித்துவரும் குளிராலும் பூச்சித் தொல்லையாலும் அறுவடை குறைந்திருப்பது இதற்குக் காரணம்.
ஆனால், கடுகுக்கீரை, பக் சோய், ஐஸ்பர்க் லெட்யுஸ் போன்ற கீரை வகைகள் நல்ல விளைச்சல் கண்டிருப்பதால், இவற்றின் விலைகள் குறைகின்றன.
தக்காளி, பிரெஞ்சு பீன்ஸ், மிளகாய், குடமிளகாய், ஜப்பானிய வெள்ளரிக்காய், பசலைக்கீரை போன்ற காய்கறிகளின் விளைச்சல் குளிரால் பாதிக்கப்பட்டதாக கேமரன் மலை காய்கறி விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் திரு சே ஈ மொங் தெரிவித்தார்.
“பழ ஈக்களும் குறைவான வெப்பநிலையும் விளைச்சலைப் பாதிக்கின்றன. இந்தக் காய்கறிகளைப் பாதுகாக்க விவசாயிகள் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விளைச்சல் குறைவாக உள்ளது,” என அவர் கூறினார்.
கேமரன் மலையில் பகலில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசும், இரவு 15 முதல் 16 டிகிரி செல்சியசும் இருக்கும். கீரை வகைகளின் விளைச்சலுக்கு உகந்த வெப்பநிலை இது என்றார் அவர்.
“தற்போது பருவநிலை பொருத்தமாக இருப்பதால் கடுகுக்கீரை, பக் சோய், ஐஸ்பர்க் லெட்யுஸ் போன்றவற்றின் விலை குறைவாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பச்சை குடமிளகாயின் விலை ஒரு கிலோகிராம் பத்து ரிங்கிட்டுக்கு (S$2.90) மேல். மஞ்சள், சிவப்பு குடமிளகாய்களின் விலை பதினைந்து ரிங்கிட் வரை உயரக்கூடும். மிளகாய் விலை ஒரு கிலோகிராம் சுமார் 7.50 ரிங்கிட். பிரெஞ்சு பீன்ஸ் 7 ரிங்கிட்டுக்கும், தக்காளி 5 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுகின்றன. ஆனால், கீரைகளின் விலை குறைந்துள்ளது.
ஜூலையில் ஒரு கிலோகிராம் 5 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்ட கடுகுக்கீரை, இப்போது ஒரு ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. பக் சோய் கீரையின் விலை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது. கேமரன் மலையின் குறைவான வெப்பநிலையால், தக்காளி, மிளகாய், பிற காய்கறிகள் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
“சில சமயங்களில், இந்தக் காய்கறிகள் ஈப்போவைக்கூடச் சென்றடைவதில்லை. அதற்குப் பதிலாக கோலாலம்பூருக்கு அல்லது சிங்கப்பூருக்கு அனுப்பப்படுகின்றன,” என்றார் அவர்.