இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் மாண்டனர்.
உடலில் வெடிபொருளைப் பிணைத்திருந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் ராணுவ வாகன அணிவகுப்பின்மேல் தனது மோட்டார் சைக்கிளை மோதியதாக பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் கூறினர்.
பன்னு மாவட்டத்தில், எல்லையிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பக்கத்து நாடான ஆஃப்கானிஸ்தானில் ஈராண்டுகளுக்குமுன் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்குப் பிறகு பாகிஸ்தானில் வன்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் குழு, ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) குழு போன்றவை, பெரும்பாலும் எல்லைப் பகுதியில் காவல்துறைக் கண்காணிப்பு இல்லாத இடங்களில் தாக்குதல்களை நடத்துகின்றன.
தாக்குதல்காரர் வியாழக்கிழமை ராணுவ லாரியின்மேல் மோதியதை பாகிஸ்தனிய அமைச்சர் ஃபெரோஸ் ஜமால் ஷா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் மேலும் ஐவர் காயமடைந்ததாக பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்தது. ஆனால் 20 பேர் காயமடைந்ததாக அமைச்சர் ஷா கூறினார்.
இந்தத் தாக்குதல் ‘கோழைத்தனமான பயங்கரவாத நடவடிக்கை’ என்று பாகிஸ்தானின் பராமரிப்புப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வட்டாரத்தில் டிடிபி குழு ஆகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதன் போராளிகள் ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பாகத் தஞ்சம் புகுந்துள்ளதாக இஸ்லாமாபாத் கூறுகிறது.
அண்மைய மாதங்களில், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக டிடிபி குழு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.