அமெரிக்காவில் மின் கார்களை தயாரிக்க ஏதுவாக வாகன தயாரிப்பு ஆலைகளுக்கு $16 பி. நிதியுதவி;

2 mins read
e26041c2-c45c-4620-a75c-24d4994ef090
அமெரிக்க அதிபர் பைடன், மின்சார வாகன உற்பத்தியை வேகப்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில் வாகன தொழில்துறை ஊழியர்கள் ஐக்கிய சங்கம் கவலை தெரிவித்துள்ளது.   - படம்: ராய்ட்டர்ஸ் 

வாஷிங்டன்: அமெரிக்காவில் செயல்படும் வாகன தயாரிப்பு ஆலைகள், மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் ஆலைகளாக மாறிக்கொள்ள ஏதுவாக அமெரிக்காவின் எரிசக்தித் துறை $16 பில்லியன் உதவியை அறிவித்துள்ளது.

அதில் US$2 பில்லியன் (S$2.7 பில்லியன்) மானியமாகக் கிடைக்கும். US$10 பில்லியன் (S$13.5 பில்லியன்) கடனாகக் கொடுக்கப்படும்.

அந்த உதவியைக் கொண்டு தொழிற்சாலைகள் எரிவாயுவில் இயங்கும் கார்களை, டிரக்குகளைத் தயாரிக்கும் வகையில் தங்கள் ஆலைகளை மாற்றிக்கொள்ளலாம்.

பிறகு அத்தகைய ஆலைகள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையும் மின்சாரம்- எரிவாயு இரண்டிலும் இயங்கும் வாகனங்களையும் தயாரிக்க முடியும்.

அந்த உதவித் தொகை, 2022 பணவீக்கப் பாதிப்புக் குறைப்புச் சட்டத்தின்கீழ் கொடுக்கப்படுகிறது.

வாகனத் தொழில்துறையில் வேலைகளை நிலைநாட்டி வரவும் வாகனத் தொழில்துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலை நிறுத்த மிரட்டலைச் சமாளிக்க வெள்ளை மாளிகை எடுக்கும் ஒரு முயற்சியாகவும் அந்த உதவி இடம்பெறுகிறது.

அமெரிக்க அதிபர் பைடன் மின்சார வாகன உற்பத்தியை அதிகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் பல ஊழியர்களுக்கு வேலை போய்விடக்கூடிய ஆபத்து இருப்பதாக வாகனத் தொழில்துறை ஊழியர்கள் ஐக்கிய சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமன்றி, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய புதிய மின் வாகனத் தயாரிப்பு ஆலைகளைத் தொழிற்சங்கங்கள் இல்லாத மாநிலங்களில் அமைக்கின்றன.

புதிய தொழிலாளர் உடன்பாடுகள் தொடர்பில் வெற்றிகரமான முறையில் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றால் பிரச்சினைதான் என்று அந்தச் சங்கம் எச்சரித்தது.

உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஜெனரல் மோட்டோர்ஸ், ஃபோர்ட் மோட்டோர், ஸ்டெல்ன்டிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அந்தச் சங்கத்தின் 97% உறுப்பினர்கள் சென்ற வாரம் தெரிவித்து இருந்தனர்.

புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிதியுதவி திட்டம் பற்றி கருத்துரைத்த அதிபர் பைடன், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத பொருளியலைச் சாதிக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள், வாகன நிறுவனங்களுக்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் சரிசம லாபத்தை ஏற்படுத்தித் தருவதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

தொழிற்சங்க ஊழியர்கள் ஆண்டாண்டு காலமாக அமெரிக்கப் பொருளியலுக்கு ஆற்றி வரும் சேவை அதிபர் பாராட்டினார்.

புதிய நிதியுதவித் திட்டம் காரணமாக உள்நாட்டில் மோட்டார் வாகனத் தயாரிப்பு தொழில்துறையில் மேலும் வேலைகள் உருவாகும்.

ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை தவிர்க்கப்படும். ஊழியர்கள் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகளைப் பெறும் வகையில் தங்களுடைய தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கும் என்றும் அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்