வெலிங்டன்: நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நியூசிலாந்தின் மேஸ்ஸி பல்கலைக்கழகம் ஆட்குறைப்பு செய்து வருகிறது, பல திட்டங்களையும் ரத்து செய்கிறது.
இந்நிலையில், மேஸ்ஸி சிங்கப்பூரில் ஒரு கிளையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் வெளிநாட்டில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் போக்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேஸ்ஸி, நியூசிலாந்தில் அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் ஆகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. சிங்கப்பூரில் இருக்கும் போதுமான வசதிகள் உள்ள கல்வி முதலீட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படப்போவதாக அது ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.
அந்நிறுவனத்தின் பெயரை வெளியிட மேஸ்ஸி மறுத்தது.
புதிய கிளையில் 2024ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்குள் 5,000 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் இலக்கை மேஸ்ஸி கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் மேஸ்ஸி 8.8 மில்லியன் நியூசிலாந்து டாலர் (7.1 மில்லியன் வெள்ளி) இழப்பைச் சந்தித்தது. நியூசிலாந்தில் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததால் போதுமான மாணவர் சேர்க்கை இல்லாமல் போனது இதற்குக் காரணம்.
நியூசிலாந்தின் பல பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அந்நாட்டின் எட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆறு, நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படுகின்றன.

