கியவ்: உக்ரேனை 18 மாத காலமாக ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, ஞாயிற்றுக்கிழமை உக்ரேனின் ஒடேசா என்ற வட்டாரத்தின் தெற்குப் பகுதியில் ஆளில்லா வானூர்திகள் மூலம் 3½ மணி நேரம் தாக்குதல் நடத்தியது.
அதனால் தனுபி என்ற நகர்ப் பகுதியில் உள்ள ஆற்றுத் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் பாழாகிவிட்டதாகவும் இரண்டு பேர் காயம் அடைந்ததாகவும் கியவ் தெரிவித்தது.
“ரஷ்யா, ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் என்ற வகை வானூர்திகளைக் கொண்டு தாக்கியது.
“ஒடேசா வட்டாரத்தின் தெற்குப் பகுதியில் மொத்தம் 25 வானூர்திகள் பறந்து வந்து தாக்கின. அவற்றில் 22 வானூர்திகளை நாங்கள் சுட்டு வீழத்திவிட்டோம்,” என்று உக்ரேன் விமானப்படை டெலிகிராம் செய்தியில் கூறியது.
உக்ரேனின் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய ஐநா ஆதரவுடன் ஜூலையில் ஓர் உடன்பாடு காணப்பட்டது. அதன்படி கருங்கடல் வழியாக உணவு தானியங்களை உக்ரேன் ஏற்றுமதி செய்ய வழி காணப்பட்டது.
ஆனால் அந்த இணக்கம் பிறகு கைவிடப்பட்டது. அதையடுத்து உக்ரேன் தனது உணவு தானியங்களை தனுபி ஆற்றுத் துறைமுகத்தின் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்து வந்தது.
தனுபியில் இரண்டு பெரிய துறைமுகங்களை உக்ரேன் நடத்தி வருகிறது. அவற்றில் ரெனி என்ற துறைமுகத்தில் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக சில உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்தன. ரஷ்யத் தரப்பில் இருந்து தகவல் இல்லை.