தைப்பே: தைவானில் ஞாயிற்றுக்கிழமை ஹாய்கூய் என்ற புயல் காற்று மிரட்டிய சூழலில் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏறக்குறைய 4,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தைவானின் தெற்கு, கிழக்குப் பகுதியில் கடும் மழையும் பலத்த காற்றும் வீசும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
தைவானின் தென்கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த காற்று வீசியது.
நான்கு ஆண்டுகளில் முதன்முதலாக ஞாயிற்றுக்கிழமை தைவானில் சூறாவளி கரையைக் கடந்தது. அந்தப் பகுதியில் பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டு இருந்தது.
முன்னதாக பேரிடர் நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய தைவானிய அதிபர் சாய் இங்-வென், மக்கள் வெளியே செல்லாமல் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். கடற்கரைக்குச் செல்லக் கூடாது.
மீன் பிடிப்பதிலோ, நீர் சறுக்கு விளையாட்டுகளிலோ விளையாடக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தார்.
ஹுவாலியன் என்ற வட்டாரத்தில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு பேர் இலேசாகக் காயம் அடைந்தனர். தலைநகர் தைப்பேயில் அங்குமிங்குமாக மட்டுமே மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கையும் சீனாவின் குவாங்டோங் என்ற தெற்கு மாநிலத்தையும் சனிக்கிழமை சோலா என்ற புயல் பதம் பார்த்தது.
தொடர்புடைய செய்திகள்
அதைவிட தைவானில் வீசிய ஹாய்கூய் புயல் வலு குறைந்திருந்தது.
தைவானின் தெற்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 3,729 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
அனைத்துலக விமானச் சேவையில் அவ்வளவாக பாதிப்பில்லை. ஞாயிற்றுக்கிழமை 41 சேவைகள் மட்டுமே ரத்தானதாக தைவானின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.
வெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்பதற்குத் தோதாக ராணுவப் படைவீரர்கள் பல்வேறு சாதனத்துடன் தயாராக இருந்தனர்.
தைவானை அடுத்து ஹாய்கூய் புயல் தைவான் நீரிணையைக் கடந்து சீனாவுக்குள் வீசும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

