ஸ்டாக்ஹோம்: சுவீடன் தலைநகரில் இவ்வாண்டு நடைபெறும் நொபெல் பரிசு விருது நிகழ்ச்சியில் ரஷ்யா, பெலருஸ், ஈரான் நாட்டுத் தூதர்களுக்கு தான் அழைப்பு விடுக்கப்போவதில்லை என்று நொபெல் அறநிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பால், கடந்த ஆண்டு ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலருசின் தூதர்களை அறநிறுவனம் புறக்கணித்தது.
இந்நிலையில், வரும் டிசம்பரில் நடைபெறும் இவ்வாண்டின் விருது நிகழ்ச்சிக்கு ரஷ்யா, பெலருஸ், ஈரான் நாட்டுத் தூதர்களுக்குத் தான் அழைப்பு விடுக்கப்போவதாக கடந்த வியாழக்கிழமை அறநிறுவனம் கூறியிருந்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விருது நிகழ்ச்சியைத் தாங்கள் புறக்கணிக்கப் போவதாக சுவீடனின் பல்வேறு அரசியல் கட்சிகள் கூறின.
இவ்வேளையில், அறநிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சுவீடன் வலுவான கண்டனக் குரல்களை நாங்கள் அறிகிறோம். எனவே கடந்த ஆண்டைபோல இவ்வாண்டும் ரஷ்யா, பெலருஸ், ஈரான் நாட்டுத் தூதர்களை நொபெல் பரிசு விருது நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைக்கப்போவதில்லை,” என்று விவரித்தது.
இந்த முடிவை உக்ரேன் வரவேற்றுள்ளது.

