தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டுத் தீயை அணைக்க போராடும் இந்தோனீசியா

2 mins read
d712830c-cb59-4766-b91e-6c8244d32b25
தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பைப் பொறுத்தமட்டில், கடந்த சனிக்கிழமை நிலவரப்படி இந்தோனீசியாவில் இவ்வாண்டு 490 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியா, அதிகரித்துவரும் காட்டுத் தீயை அணைக்கப் போராடி வருகிறது. செப்டம்பரில் உச்சம் தொடும் காட்டுத் தீ நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரம் அடைந்து வருகிறது.

‘எல் நினோ’ பருவநிலை நிகழ்வால் இந்தோனீசியாவில் இவ்வாண்டு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. ‘எல் நினோ’வால் இந்தோனீசியாவில் வறண்ட வானிலை நிலவுகிறது.

தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பைப் பொறுத்தமட்டில், கடந்த சனிக்கிழமை நிலவரப்படி இந்தோனீசியாவில் இவ்வாண்டு 490 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு பதிவான 160 காட்டுத் தீச்சம்பவங்களைவிட இது மும்மடங்காகும்.

காட்டுத் தீயால் மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றான மத்திய கலிமந்தானில் இவ்வாண்டு 202 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் கிட்டத்தட்ட 3,000 ஹெக்டர் பரப்பளவு நிலம் தீக்கிரையானது. காட்டுத் தீ காரணமாக கடந்த மே மாதம் அவசரநிலையை அறிவித்த மாநிலங்களில் மத்திய கலிமந்தானும் ஒன்று.

மத்திய கலிமந்தானின் தலைநகரமும் ஆகப் பெரிய நகரமுமான பலாங்கராயாவில் வறண்ட பருவம் தொடங்கியதிலிருந்து 87 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.

ஒரே நேரத்தில் குடியிருப்புப் பகுதிகள் உட்பட வெவ்வேறு இடங்களில் காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீயணைப்பு வீரர்கள் இருப்பதாலும் தண்ணீர் விநியோகத்தில் கட்டுப்பாடு நிலவுவதாலும் காட்டுத் தீயை அணைப்பதில் சவால் நிலவுகிறது.

காட்டுத் தீ காரணமாக காற்றின் தரம் மோசமடைவதால், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலையில் உள்ளனர். வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மத்திய கலிமந்தானில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதியான கிழக்கு கோத்தாவரிங்கினிலும் தீயை அணைக்க அதிகாரிகள் திணறி வருகின்றனர். தீயணைப்பாளர்கள், தீயணைப்புச் சாதனங்கள் போதாததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த மே மாதத்திலிருந்து 500 ஹெக்டர் பரப்பளவு நிலம் தீக்கிரையானது.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீ