தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நின்றுபோன மியன்மார் அமைதித் திட்டம்; மறுஆய்வு செய்ய ஆசியான் சந்திப்பு

2 mins read
101d2992-e57a-4d51-98f0-978a8af819a3
ஜகார்த்தாவின் ஆசியான் செயலகத்தில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: மியன்மாரில் அமைதி ஏற்படுத்தும் தங்களின் திட்டம் நின்றுபோன நிலையில் திட்டத்தை மறுஆய்வு செய்திட, தென்கிழக்காசியாவின் உயர்மட்ட அரசதந்திரிகள் திங்கட்கிழமையன்று சந்தித்துள்ளனர்.

மியன்மாரில் ஆட்சிக்கழிப்புக்குப் பின் அந்நாட்டு ராணுவம் ஈராண்டுக்குப்பிறகும் அங்கு நிலவிவரும் வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வராதது சினத்தை மேன்மேலும் தூண்டிவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து மியன்மார் நிலவரம் குறித்துப் பேசவுள்ளனர். மியன்மார் விவகாரத்துடன் தென்சீனக் கடல் தொடர்பான நடத்தை நெறிமுறைகள், ஆசியான் வட்டாரத்தின் பொருளியல், நாடுகடந்த குற்றச்செயல்கள் உள்ளடங்கிய இதர விவகாரங்களும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் உறுப்புநாடுகளில் மியன்மாரும் ஒன்று. இருப்பினும் 2021ல் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கவிழ்ப்பு செய்துவிட்ட நிலையில் அதன் ராணுவத் தலைவர்கள் உயர்மட்ட வட்டாரச் சந்திப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

அனைத்துத் தரப்பினரும் வன்முறையை நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான ஓர் அமைதித் திட்டத்தை ஆசியான் வகுத்திருந்தாலும் மியன்மார் ராணுவத் தலைவர்கள் அத்திட்டம் நிறைவேற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

“மியன்மாரில் அமைதியான, நீடித்த ஒரு தீர்வை உறுதிசெய்தால்தான் ஆசியான் முழு ஆற்றலுடன் முன்னோக்கிச் செல்ல முடியும்,” என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.

ஆசியான் பல ஆண்டுகளாக உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத கொள்கையைக் கொண்டுள்ளது. அத்துடன் பெரும்பான்மையான கருத்து அடிப்படையில் ஆசியான் நாடுகள் முடிவெடுப்பதும் வழக்கம். இருப்பினும் மியன்மார் விவகாரம் போன்ற பிரச்சினைகளை ஆசியான் தீர்க்கச் சிரமப்படுகிறது. உயர்மட்டச் சந்திப்புகளில் மியன்மார் தலைவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதுடன் மியன்மாருக்கு எதிராக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்