ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. பினாங்கிலும் சரவாக்கிலும் உள்ள சில பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது.
கிழக்கு மாநிலமான சரவாக்கின் ஸ்ரீ அமான், கூச்சிங், செரியானில் திங்கட்கிழமை காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது.
காலை 9 மணிக்கு ஸ்ரீ அமானில் காற்றுத் தரக் குறியீடு 154 எனப் பதிவானது. மலேசியாவில் பதிவானதிலேயே ஆக அதிக அளவு இது. கூச்சிங்கில் குறியீடு 133ஆகவும் செரியானில் அது 128ஆகவும் பதிவானது.
சரவாக்கின் மற்ற பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான அளவில் இருந்தது. புகைமூட்டம் மோசமடைவதைத் தடுக்க திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படி சரவாக் தீயணைப்பு, மீட்புத் துறை உள்ளூர்வாசிகளைக் கேட்டுக்கொண்டது.
மேற்கு கலிமந்தானில் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் மேற்கு சரவாக்கை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.