இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு பற்றிய அதிர்ச்சித் தகவல்

இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு பற்றிய அதிர்ச்சித் தகவல்

2 mins read
a0e13661-94b0-4584-b6ed-4f5cb8b1af11
2019ஆம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். - படம்: ஊடகம்

லண்டன்: இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு 250க்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கிய ஈஸ்டர் சண்டே குண்டுவெடிப்பில் ராஜபக்சே குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஹன்ஸீர் ஆஸாத் மவுலானா என்பவர் ‘சேனல் 4’ ஒளிவழிக்கு அளித்த பேட்டியை அது மேற்கோள் காட்டி உள்ளது.

2019ஆம் ஆண்டு பயங்கரக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தபோது ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சிப்பொறுப்புகளில் இல்லை.

அவர்கள் பதவிக்கு வருவதற்கு உதவியாக இலங்கையில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்க பல ஆண்டுகளாகத் திட்டம் தீட்டப்பட்டு வந்ததாக மவுலானா கூறியதாக ‘டைம்ஸ்’ தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு மூத்த ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியான சுரேஷ் சாலிக்கும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோருக்கும் இடையிலான கூட்டத்துக்கு தாம் ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“கூட்டம் முடிந்ததும் சுரேஷ் சாலி என்னிடம் வந்தார். இலங்கையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க ராஜபக்சேக்கள் விரும்புவதாக அவர் சொன்னார். கோத்தபய அதிபர் ஆவதற்கு அவ்வாறு செய்வது ஒன்றே வழி என்றும் அவர் கூறினார்.

“அந்தத் தாக்குதல் ஒன்றிரண்டு நாளில் திட்டமிடப்பட்டது அல்ல. இரண்டு, மூன்று ஆண்டுகளாக அதற்கான திட்டம் தீட்டப்பட்டது,” என்றார் மவுலானா.

ஈஸ்டர் சண்டே தாக்குதலால் சீர்குலைந்த பாதுகாப்பை ஆறு மாதங்களில் மீட்டெடுக்கப்போவதாக வாக்குறுதி அளித்து அதிபர் பதவிக்கு வந்தார் கோத்தபய ராஜபக்சே. அதன் பிறகு சுரேஷ் சாலி ராணுவ உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பிரிட்டிஷ் ஊடகத்திடம் பேட்டி அளித்திருக்கும் மவுலானா கடந்த ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய உளவு முகவைகளிடமும் ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும் இந்தத் தகவல்களைக் கூறினார்.

அவர் கூறிய தகவல்கள் நம்பகமானவை என்று அந்த அமைப்புகள் கருதியதாகவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் ‘டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்