சோல்: திங்களன்று பேரணியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று தென் கொரிய கல்வி அமைச்சர் லீ ஜூ ஹோ செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
மேலும், அத்தகைய கூட்டு நடவடிக்கை “சட்டவிரோத வேலைநிறுத்தம்” என்ற தனது எச்சரிக்கையை அவர் அதிகாரபூர்வமாக திரும்பப்பெற்றுக் கொண்டார்.
தென் கொரியத் துணைப் பிரதமருமான லீ ஜூ ஹோ, பேரணியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, மாணவர்களுடன் இருக்குமாறு செப்டம்பர் 3 அன்று தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்தார்.
தென் கொரிய ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், கொரிய ஆசிரியர் தொழிற் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஆசிரியர்களுக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றார் அவர். அத்துடன், அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
சோல் நகரில் ஜூலை 18ஆம் தேதி தொடக்கப் பள்ளி இளம் ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதைத் தொடர்ந்து, அண்மைய ஆண்டுகளில் கொரிய ஆசிரியர்கள் எதிர்கொண்டு வரும் துன்புறுத்தல்கள் மீது கவனம் குவிந்துள்ளது.
ஆசிரியர் தொழிற் சங்கங்களின் சம்மேளனம் ஏப்ரல் மாதம் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் நடத்திய ஆய்வில், 26.6 விழுக்காடு ஆசிரியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆசிரியர்களின் உரிமை மீறல்களால் மனநல சிகிச்சை அல்லது ஆலோசனை பெற்றதாகக் கூறியுள்ளது.
தலைநகர் சோலில், தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், குழந்தைகள் நலச் சட்டமும் குழந்தை துன்புறுத்தல் தண்டனைச் சட்டமும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பெற்றோரிடமிருந்து தவறான குற்றச்சாட்டுகளைத் தடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். தென் கொரியா முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

