ஆங் சான் சூச்சிக்கு உடல்நலக் குறைவு; வெளிமருத்துவரைக் காண அனுமதி மறுப்பு

2 mins read
3dbfce10-97e5-4e3c-920b-29eb013cfc79
2021 ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தபோது, கைது செய்யப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியை விடுதலைசெய்யும்படி நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி உடல்நலமின்றி இருப்பதாகவும், வெளி மருத்துவர் சிகிச்சைக்கான கோரிக்கையை அந்நாட்டு ராணுவ ஆட்சி நிராகரித்துள்ளதாகவும் செய்தி கசிந்துள்ளது.

அவர் உடல்நிலை குறித்த விவரங்களை அறிந்த அவரது விசுவாசி ஒருவர் செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார். கைது செய்யப்படலாம் என்ற பயம் காரணமாக அவர் தனது அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டார்.

நோபல் பரிசு பெற்ற 78 வயதான திருவாட்டி ஆங் சான் சூச்சிக்கு சிறைத்துறை மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். “ஈறுகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தால் அவர் அவதிப்படுகிறார். அவரால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. வாந்தி, லேசான தலைசுற்றல் பிரச்சினைகள் அவருக்கு உள்ளன,” என்று அந்த விசுவாசி கூறியுள்ளார்.

மியன்மார் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மார், 2021 தொடக்கத்தில் இருந்து கொந்தளிப்பாக உள்ளது. ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததுடன், ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை இரும்புக் கரங்களால் ஒடுக்கி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.

திருவாட்டி சூச்சி 19 கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக, 27 ஆண்டுகால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேர்தல் மோசடிகள் முதல் ஊழல் வரை தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள அவர், அவற்றுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

தலைநகர் நய்பிடாவில் உள்ள சிறையில் இருந்து ஜூலை மாதம் அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.

ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களால் அமைக்கப்பட்ட ரகசிய தேசிய ஒற்றுமை அரசாங்கம், அரசியல் கைதிகளின் உடல்நலம், பாதுகாப்பு ராணுவ ஆட்சியினரின் பொறுப்பு என்று கூறியுள்ளது.

“ஆங் சான் சூச்சி உட்பட அனைத்து அரசியல் கைதிகளின் உடல்நலம், பாதுகாப்புக்கு அனைத்துலக சமூகம் ராணுவ ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கியாவ் ஜாவ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பல அரசாங்கங்கள் சூச்சி மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உட்பட சில, நாடுகள் மியன்மார் ராணுவத்துக்கு தடைகள் விதித்துள்ளன.

ஆங் சான் சூச்சி
ஆங் சான் சூச்சி - கோப்புப் படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்