ஜெனீவா: பங்ளாதேஷில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கிப் பரவல் ஆக மோசமான நிலையில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இதற்குப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று நிறுவனம் குறிப்பிட்டது.
ஏப்ரல் மாதத்திலிருந்து, இதுவரை 135,000க்கும் அதிகமானோர் டெங்கிப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 650 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கிப்ரியேசஸ் கூறினார்.
“இந்தப் பரவலால் சுகாதாரச் சேவைகள் பெரும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.
தலைநகர் டாக்காவில் டெங்கிப் பரவல் குறையத் தொடங்கியிருந்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகச் சுகாதார நிறுவனம் பங்ளாதேஷுக்கு வல்லுநர்களை அனுப்பி இருக்கிறது. பரவலைக் கண்காணிக்கவும், ஆராய்ச்சிக்கூடக் கொள்ளளவைப் பெருக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.
டெங்கியும் கொசுக்களால் பரப்பப்படும் மற்ற நோய்களும் பருவநிலை மாற்றத்தால் வேகமாகவும் தூரமாகவும் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
பங்ளாதேஷ், தென்னமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கிப் பரவல் மோசமடைவதற்குப் பருவநிலை மாற்றமும் எல் நினோ சூடேற்றமும் காரணம் என்று நிறுவனத்தின் எச்சரிக்கை செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் அப்டி மஹமுத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சஹாராவுக்குத் தெற்கே அமைந்துள்ள சாட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் அண்மையில் டெங்கிப் பரவல் பற்றி தகவல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சென்ற வாரம், குவாத்தமாலாவில் டெங்கிப் பரவலால் தேசிய சுகாதார நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது.