சோல்: வட கொரியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) தனது முதல் அணுசக்தி தாக்குதல் நடத்தக்கூடிய நவீன நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தி உள்ளது. இது அதன் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதி என்று வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கொரியத் தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடற்பகுதியில் காவல் பணியில் ஈடுபடும்.
’ஹீரோ கிம் குன் ஓகே’ (Hero Kim Kun Ok) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் புதன்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
“நீருக்கடியில் தாக்குதல் நடத்துவதற்கான கடற்படையின் முக்கிய தளவாடம்” என்று அவர் இக்கப்பலைக் குறிப்பிட்டார். கடற்படையின் கப்பல்கள், நீர் மூழ்கிகளில் விரைவில் அணு ஆயுதங்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், புதிய நீர்மூழ்கிக் கப்பலில் எவ்விதமான ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை வடகொரியா வெளியிடவில்லை.
1970களில் வடகொரியா சீனாவிடமிருந்து வாங்கி உள்நாட்டில் தயாரிக்கத் தொடங்கிய சோவியத் கால ரோமியோ வகை நீர்மூழ்கிக் கப்பலாக இந்தக் கப்பல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நீர்மூழ்கிக் கப்பல் சாதாரண நடவடிக்கைகளுக்குத் தயாராக இல்லை என்றும், வட கொரியா அதன் திறன்களை பெரிதுபடுத்திக் காட்டுவதாகத் தெரிவதாக தென் கொரிய ராணுவம் கூறியது.
பல மணி நேரம் நீரில் மூழ்கியபடி பயணம் செய்யும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து அணுஆயுதத் தாக்குதல் நடத்தலாம்.
அண்மையில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய பல்வேறு ஏவுகணைகளையும் கப்பலில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளையும் வடகொரியா அடுத்தடுத்து சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

