தோக்கியோ: ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையின் சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் கலக்கும் நடவடிக்கையின் முதற்கட்டம், திட்டமிட்டபடி திங்கட்கிழமை செப்டம்பர் 11ஆம் தேதி முடிவடையும் என தோக்கியோ மின்சார நிறுவனம் (டெப்கோ) தெரிவித்தது.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அந்த ஆலைக்கு அருகிலிருந்து எடுக்கப்பட்ட கடல்நீரைச் சோதித்து பார்த்ததில், கதிரியக்க ட்ராய்ட்டியத்தின் அளவு பாதுகாப்பான அளவுக்குள் இருந்ததாகவும் டெப்கோ வியாழக்கிழமை இரவு தெரிவித்தது.
சென்ற 2011ஆம் ஆண்டு சுனாமியால் முடங்கிப்போன அணுசக்தி ஆலையிலிருந்து 1.34 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜப்பான் ஆகஸ்ட் 24ஆம் தேதி பசிபிக் கடலில் கலக்கத் தொடங்கியது. முதற்கட்டத்தில் 7,800 டன் நீர் கடலில் வெளியேற்றப்படும்.
“முதற்கட்டம் முடிவடைந்த பின்னர், ஒட்டுமொத்த … நீர்க்கலப்பை / ஆலையை நாங்கள் சோதனையிட்டு, நடைமுறைகளை மறுஆய்வு செய்வோம்,” என்று டெப்கோ தெரிவித்தது. அதன்பிறகே இரண்டாம் கட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும்.
இந்த நீரைக் கடலில் கலப்பது பாதுகாப்பானதே என்று ஜப்பான் கூறி வருகிறது. ஐக்கிய நாட்டு அணுசக்தி அமைப்பும் இதற்கு ஆதரவளிக்கிறது.
ஆனால், ஜப்பான் கடலை ஒரு “சாக்கடை” போல் பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டுகிறது. அதோடு, ஜப்பானிலிருந்து கடலுணவு இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளது.
முதற்கட்டத்தில் வெளியாக்கப்படும் நீர், ஒலிம்பிக் அளவிலான 54 நீச்சல் குளங்களை நிரப்பக்கூடியது. இதிலிருந்து ட்ராய்ட்டியம் தவிர மற்ற அனைத்து கதிரியக்கப் பொருள்களும் அகற்றப்பட்டுவிட்டதாக ஜப்பான் கூறுகிறது.
அணுசக்தி ஆலையிலிருந்து மொத்த நீரையும் வெளியேற்ற பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎப்பி