லண்டன்: ரஷ்யாவின் துணை ராணுவப் படையான வாக்னர் படைப் பிரிவை பிரிட்டன் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யவுள்ளது என்று நகல் உத்தரவை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
வாக்னரின் சொத்துகளை பயங்கரவாதச் சொத்துகளாக வகைப்படுத்தி பறிமுதல் செய்ய அனுமதிக்கும் அந்த உத்தரவின்படி அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதோ ஆதரிப்பதோ சட்டவிரோதமாகும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ராணுவ ஆயுதமாக விளங்கிய வாக்னர், வன்முறை மற்றும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ்மேன் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
“அவர்கள் பயங்கரவாதிகள். இந்தத் தடை உத்தரவு பிரிட்டிஷ் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
வாக்னரை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதால் பிரிட்டனில் அந்த இயக்கத்திற்கு ஆதரவு தேடுவது, அதன் தொடர்பில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, உரையாற்றுவது, அதன் சின்னத்தை பொதுவில் எடுத்துச் செல்வது குற்றவியல் குற்றமாகும்.
2022ல் உக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவியபோது அங்கு வாக்னர் படை நிறுத்தப்பட்டது. டிசம்பரில் உக்ரேனினின் பாக்முட் நகரில் நடைபெற்ற போரில் வாக்னர் முக்கிய பங்கு வகித்தது.

