புத்ரா ஜெயா: இந்தியப் பாரம்பரியத் தொழில்களான சிகை அலங்காரம், ஜவுளி வணிகம், பொற்கொல்லர் துறைகளில் தொடக்கமாக, 7,500 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரம் இன்று காலையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,” என்று சிவகுமார் வெள்ளிக்கிழமை (செப். 8) தெரிவித்தார்.
ஊழியர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தத் துறைகளைச் சார்ந்த வணிகங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஊழியர் பற்றாக்குறையால் பலவற்றை மூட வேண்டியிருந்தது.
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு திங்கட்கிழமை வருகை அளித்த பிரதமர் அன்வார் இப்ராகிம் சிகை அலங்காரம், ஜவுளி வணிகம், பொற்கொல்லர் ஆகிய துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பெற அனுமதி வழங்கப்படும் என்று திங்கள்கிழமை அறிவித்தார்.

