தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நோய்களும் அழுக்குநீரும் காரணம்

மலேசியாவில் உள்ளூர் அரிசிக்குத் தட்டுப்பாடு

2 mins read
d77ef98a-156c-4b5d-b5f6-ed0aaa84868f
மலேசியாவின் செகின்சான் பகுதியில் வயலில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் ஊழியர்கள். - படம்: இபிஏ

கிள்ளான்: மலேசியாவில் விளையும் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மளிகைக்கடை உரிமையாளர்களும் அரிசி விநியோகிப்பாளர்களும் கூறுகின்றனர். விலை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உள்ளூர் அரிசி கிடைத்து சிறிது காலமாகிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

ஆரம்பத்தில் பேரங்காடிகளிலும் மளிகைக் கடைகளிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளூர் அரிசி கிடைத்தது. இப்போது தட்டுப்பாடு மோசமடைந்திருப்பதால், இறக்குமதியாகும் அரிசியைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

தாமான் ஸ்ரீ அண்டாலாசில் மளிகைக் கடை நடத்தும் திரு சி. ராமு, தனது மூன்று அரிசி விநியோகிப்பாளர்களும் உள்ளூர் அரிசி அனுப்புவதை நிறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். 

தற்போது இறக்குமதி செய்யப்படும் அரிசி மட்டுமே கிடைப்பதாகவும், பத்து கிலோ பை 33 ரிங்கிட்டுக்கு விற்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால், விலை விரைவில் உயரும் என விநியோகிப்பாளர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர். 

“இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விலைக் கட்டுப்பாடு இல்லை என்பதால், அது கிடுவிடுவென உயரக்கூடும்,” என்றார் அவர். 

உள்ளூர் அரிசி தட்டுப்பாட்டுக்கு அழுக்குநீர் ஒரு காரணம் என்று நெல் விவசாயி யாப் காங் புவா கூறினார். சுத்தமான நீருக்குக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகவே பற்றாக்குறை இருப்பதாகவும், இப்போது நிலைமை மோசமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் விதைகள் தரமில்லாதவையாக இருப்பதால், தாவர நோய்களால் பாதிக்கப்படுவதாக இன்னொரு விவசாயி முகமது அஸ்ரி பட்ரோன் கூறினார். 

இதற்கிடையே, உள்ளூர் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசியாக விற்கப்படுவதாகச் சந்தேகம் இருப்பதாகவும், விநியோகத் தொடரை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என்றும் செகின்சான் நாடாளுமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம் கூறியிருக்கிறார். 

“இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுகிறது. உள்ளூர் அரிசியின் பொட்டலத்தை மாற்றி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியாகக் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்