தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் இறக்குமதி அரிசி விலை மேலும் உயரும் நிலை

2 mins read
4f3d8146-fecd-450f-bccf-64aefa12ff04
உலகளவில் வெள்ளை அரிசி விலை அதிகரிக்கிறது. இந்த நிலையில், அரிசி உற்பத்தியில் 100க்கு 100 சுயசார்பை எட்டுவதே மலேசியாவுக்குத் தலைசிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவைப் பொறுத்தவரை வரும் மாதங்களில் இறக்குமதியாகும் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கவிருக்கிறது என்று வேளாண், உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.

வெள்ளை அரிசி இப்போது உலகம் முழுவதும் ஒரு மெட்ரிக் டன் சுமார் US$700 (3,272 ரிங்கிட்) விலைக்கு விற்கப்படுகிறது.

இருந்தாலும் 2008ல் உலக அரிசி நெருக்கடி ஏற்பட்டபோது ஒரு மெட்ரிக் டன் சுமார் US$1,000 (4,677 ரிங்கிட்) விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலை இன்னமும் வரவில்லை.

இது பற்றி கருத்து கூறிய அந்த அமைச்சின் வேளாண் தொழில்துறை மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அஸ்மான் முகம்மது, இது ஓர் உலகப் பிரச்சினை என்பதால் விலையைக் கட்டுப்படுத்த நம்மால் முடியாது என்று கூறியதாக தி ஸ்டார் தெரிவித்தது.

மலேசியாவுக்குள் இறக்குமதியாகும் வெள்ளை அரிசியின் விலை 36% அதிகரித்து இப்போது ஒரு டன் 3,200 ரிங்கிட்டாக இருக்கிறது என்று அரிசியை இறக்குமதிச் செய்ய உரிமம் பெற்றிருக்கும் பெடிபராஸ் நேஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) செப்டம்பர் 1ஆம் தேதி அறிவித்தது.

உலகில் ஆக அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்யும் இந்தியா, அரிசி ஏற்றுமதிக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

என்றாலும் இதன் காரணமாக மலேசியாவுக்கு இப்போது பாதிப்பு எதுவும் இல்லை என்று அஸ்மான் கூறினார்.

மலேசியாவில் அரிசி விளைகிறது. இருந்தாலும் அது உள்ளூர் தேவையை நிறைவேற்றும் அளவுக்கு இல்லை.

மலேசியா தனக்குத் தேவையான அரிசியில் 75 விழுக்காட்டை 2025ஆம் ஆண்டுக்குள் உற்பத்திச் செய்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

அதனுடைய தேசிய வேளாண் உணவுக் கொள்கை 2021-2030ன் கீழ் 80 விழுக்காட்டுச் சுயசார்பை எட்டிவிட வேண்டும் என்று மலேசியா விரும்புகிறது.

உலகப் பிரச்சினைகள், நிலவரங்கள் எப்படி இருந்தாலும் அவற்றை எல்லாம் தவிர்த்துக்கொள்ளும் வகையில் மலேசியா 100 விழுக்காட்டு அரிசி சுயசார்பு நிலையை எட்ட பாடுபட வேண்டும் என்று திரு அஸ்மான் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான், வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து மலேசியா அரிசியை இறக்குமதிச் செய்ய முடியும் என்றாலும் அரிசி உற்பத்தியில் சுயசார்புதான் தலைசிறந்த அணுகுமுறை என்றாரவர்.

மலேசியாவில் இப்போது ஆறு மாதத்திற்குப் போதுமான அரிசி இருப்பு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

அரிசியை இறக்குமதிச் செய்ய இதர நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், பெர்னாஸ் அமைப்புக்கு 2031 ஜனவரி வரை அரிசி இறக்குமதி உரிமை இருப்பதாகவும் அரிசி இறக்குமதி செய்ய இதர நிறுவனங்களையும் அனுமதிப்பதா, வேண்டாமா என்பது பற்றி பிரதமர் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்