ஜி20ல் ஆப்பிரிக்க ஒன்றியம்; பிரம்மாண்ட ரயில், துறைமுக இணைப்புத் திட்டம்

3 mins read
6483197a-3cf9-460b-b7e6-d286a475d234
ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் முழு உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று புதுடெல்லி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம் 

புதுடெல்லி: உலகின் பணக்கார நாடுகளும் வல்லரசு நாடுகளும் அங்கம் பெற்று உள்ள ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லியில் ஜி20 உச்சநிலை மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்தார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தில் அந்தக் கண்டத்தில் உள்ள 55 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஜி20 அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் முழு உறுப்பியத்தைப் பெற்று இருக்கிறது.

அதேபோல, ஆப்பிரிக்க ஒன்றியமும் முழு உறுப்பியத்தைப் பெற்று இருக்கும்.

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் சேர்ந்து இருப்பதால் தென் உலகின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று எக்ஸ் தளத்தில் திரு மோடி தெரிவித்தார்.

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் சேர்க்க வேண்டும் என்று திரு மோடி கடந்த ஜூன் மாதம் யோசனை தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, சனிக்கிழமை ஜி20 முதல் நாள் உச்சநிலை மாநாட்டில் ஒரு நகல் பிரகடனம் உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் நிரந்தர உறுப்பியத்தைப் பெற்று இருக்கிறது என்று அந்தப் பிரகடனம் தெரிவித்தது.

பல தரப்பு அமைப்புகள், வளரும் நாடுகளுக்கு அதிக கடனை வழங்குவது, அனைத்துலக கடன் வழங்கும் அமைப்புகளைச் சீர்படுத்துவது, மின்னிலக்க நாணயம் தொடர்பான விதிமுறைகளை நிர்ணயிப்பது, உணவு, எரிசக்தி பாதுகாப்பில் புவிசார் நிலவரங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி விவாதிப்பது உள்ளிட்ட பலவும் புதுடெல்லி கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று இருப்பதாக அந்த 38 பக்க பிரகடனம் குறிப்பிட்டது.

உக்ரேன் தொடர்பில் அதில் எதுவும் இடம்பெற இல்லை.

பன்னாட்டு ரயில், துறைமுக இணைப்பு

இதனிடையே, மத்திய கிழக்கையும் தெற்கு ஆசியாவையும் இணைக்கும் பன்னாட்டு ரயில், துறைமுக உடன்பாடு பற்றி சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று முன்னதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது.

சீனா உலகளவில் பல நாடுகளையும் இணைக்கும் கடல்-சாலை உள்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை பிரம்மாண்ட அளவில் தீட்டி இருக்கிறது.

அதற்குப் பதிலடியாக ஓர் ஏற்பாடு இடம்பெற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பைடன் விரும்புகிறார்.

வளரும் நாடுகளுக்கான அந்த ஏற்பாட்டில் பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் அமெரிக்கா திகழ்வதும் அவரின் திட்டம்.

அந்த உடன்பாடு இந்த வட்டாரத்தில் உள்ள குறைந்த, நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளுக்கு உதவும்.

உலக வர்த்தகத்தில் மத்திய கிழக்கு வட்டாரம் முக்கியமான பணியாற்றவும் அது வகைசெய்யும் என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபினர் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளை ரயில் சேவை மூலம் இணைக்கவும் அவற்றைத் துறைமுகம் மூலம் இந்தியாவுடன் இணைக்கவும் அந்த உடன்பாடு வகைசெய்கிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு எரிசக்தி செல்லவும் வர்த்தகம் நடைபெறவும் அது உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த உடன்பாடு தொடர்பிலான புரிந்துணர்வுக் குறிப்பில் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஜி20 அமைப்பின் இதர நாடுகளும் புதுடெல்லியில் கையெழுத்திடும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்