வெளிநாட்டில் இந்திய நகைக்கடைகளைக் குறிவைத்துக் கொள்ளை

1 mins read
aa68ce3f-a9d4-43b0-b6c2-021a0c844c9a
கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 16 பேர் பிடிபட்டுள்ளனர். - படம்: ஊடகம்

நியூயார்க்: அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய நகைக்கடைகளைக் குறிவைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்குக் கடலோரப் பகுதியிலுள்ள நியூயார்க், நியூஜெர்சி, வெர்ஜீனியா, பென்சில்வேனியா, ஃபுளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல இந்திய, தெற்காசிய நகைக்கடைகளில் கடந்த 2022 ஜனவரி முதல் ஜனவரி 2023 வரை அக்குற்றக் கும்பல் கைவரிசை காட்டியது.

அக்கும்பலைச் சேர்ந்த 16 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். அவர்களில் எட்டுப் பேர் கடந்த வாரந்தான் சிக்கினர்.

கருநிற ஆடை, முகமூடி, கையுறைகளை அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்தும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் அக்கும்பல் பேர்வழிகள் கொள்ளையில் ஈடுபட்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை (எஃப்பிஐ) தெரிவித்தது.

இந்தக் குற்றச் செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்திய கார்களும் திருடப்பட்டவைதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் பயன்படுத்திய கைப்பேசிகள், கார்கள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிழக்குக் கடலோரப் பகுதிகளில் செயல்படும் சிறுவணிகர்களைக் குறிவைத்து அக்கும்பல் செயல்பட்டதாகவும் குடும்பங்கள் தங்களது கடும் உழைப்பால் சேர்த்த பல நூறாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும் எஃப்பிஐ உதவி இயக்குநர் டேவிட் சண்ட்பெர்க் கூறினார்.

குறிப்புச் சொற்கள்