லண்டன்: பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம், நொடித்துப்போனதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
தொழிலாளர் கட்சி நிர்வாகம் செய்யும் இந்நகரம் போதிய வருமானம் இல்லாததால், அத்தியாவசிய செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக கார்டியன் செய்தி தெரிவித்தது.
செலவை ஈடுசெய்ய போதுமான வருமானம் இல்லாத நிலையில், நொடித்துப் போனதாக அறிவிக்கும் வெளியிடப்படும் நோட்டீஸை அது வெளியிட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் மூழ்கும் நகரங்களின் வரிசையில் இது சேர்ந்துள்ளது. துர்ராக், குரோய்டன், ஸ்லோக், நார்த்தாம் டன்ஷையர் ஆகிய அனைத்தும் அண்மைய ஆண்டுகளில் அந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
நொடித்துப் போகும் நிலைக்கு முக்கிய காரணமாக, சம ஊதிய திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகரான சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சம ஊதியம் வழங்க நகரத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பெண் ஊழியர்களுக்கு 1.1 பில்லியன் பவுண்ட் தொகையை நகர நிர்வாகம் அளித்திருந்தது. இன்னும் 760 மில்லியன் பவுண்ட் தொகை வழங்க வேண்டி உள்ளது. 2023 -24 நிதியாண்டில் இந்த நகருக்கு 87 மில்லியன் பவுண்ட் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனை தவிர்த்து தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அதிக செலவு செய்ததும், அப்போதைய பிரிட்டன் அரசு செலவை குறைத்ததும் பர்மிங்காம் நகருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஏற்படுத்த 19 மில்லியன் பவுண்ட் செலவாகும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலதாமதம் மற்றும் பல்வேறு சிக்கல்களால் 100 மில்லியன் பவுண்டுகள் செலவு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.
2022ல் காமன்வெல்த் போட்டிகளை இந்த நகரம் நடத்தியது. 2026ல் ஐரோப்பிய தடகளப் போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பர்மிங்காம் கவுன்சிலின் முன்னாள் ஆலோசகர் கூறுகையில், காமன்வெல்த் போட்டியை நடத்தியதும், நகரம் நொடித்துப் போகும் நிலை முக்கியக் காரணங்களில் ஒன்று எனக்கூறியுள்ளார்.