தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,000 மீட்டர் ஆழத்தில் உள்ள குகையில்சிக்கிக்கொண்ட அமெரிக்கர்

2 mins read
b32b3c2e-e357-4e0a-ba0a-0f8325d63058
திரு டிக்கி வெளியிட்ட காணொளியில் 1,000 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை வெளியிட்டுள்ளார். - படம்: ஏஎஃப்பி

மெர்சின் (துருக்கி): குகைகளுக்குள் சென்று ஆராய்வதை ஆர்வமாகக் கொண்டுள்ள அமெரிக்கர் ஒருவர், அதே ஆர்வக் கோளாறால் துருக்கியில் 1,000 மீட்டர் ஆழத்தில் உள்ள குகையில் சிக்கிக் கொண்டார்.

மார்க் டிக்கி, 40, எனும் அந்த நபர், தான் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருப்பதாக காணொளிப் பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

தெற்கு துருக்கியில் மெர்சினில் உள்ள டாரஸ் மலைப்பகுதியில் உள்ள குகையில் சிக்கிக் கொண்ட அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

அந்த குகை, 1,040 மீட்டர் ஆழத்தில் உள்ளது. அவரைக் காப்பாற்றுவதற்காக துருக்கி மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு வழியாக, மீட்புக் குழு ஒன்று, மருந்துகளுடன் அவரைச் சென்றடைந்துள்ளது.

“ஹாய், நான் மார்க் டிக்கி, ஏறக்குறைய ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இருக்கிறேன்,” என்று தன்னைப் பற்றிய காணொளிப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிருந்து வெளியேற எனக்கு அதிக அளவு உதவி தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவப் பிரிவின் தலைவரான துல்கா செனர், திரு டிக்கியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்குள்ள முக்கிய அறிகுறிகள் சாதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரை வெளியே கொண்டு வரும் வழியில் மூன்று மருத்துவர்கள் அவரைக் கவனித்துக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

திரு டிக்கியை மீட்கும் பணி சிக்கலாக இருப்பதால் ஏழு பிரிவுகளாக மீட்புக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர் என்று துருக்கியின் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் தேடி, மீட்புக்குழுத் தலைவர் ரெஸப் சால்சி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்