கியவ்: கிரைமியா வட்டாரத்துக்கு அருகே உள்ள கருங்கடல் பகுதிக்கு மேல் பாய்ச்சப்பட்ட எட்டு உக்ரேனிய வானூர்திகளை ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யாவின் ஆகாயத் தற்காப்பு முறைகள் அழித்ததாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டெலிகிராம் செயலியில் அறிக்கை ஒன்றின் மூலம் ரஷ்ய தற்காப்பு அமைச்சு இத்தகவலை வெளியிட்டது. சேதம் ஏற்பட்டதாகவோ யாரும் காயமுற்றதாகவோ தகவல் இல்லை.
இச்செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் சரிபார்க்க இயலவில்லை. உக்ரேனும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, உக்ரேன் தலைநகர் கியவ், அதன் சுற்று வட்டாரம் ஆகியவற்றின்மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரஷ்யா வானூர்தித் தாக்குதல்களை மேற்கொண்டது என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்கள் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு நீடித்ததாகவும் சிதைவுகள் கியவ் நகரின் மத்தியப் பகுதிகளில் விழுந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ரஷ்யா பாய்ச்சிய 32 ஷாஹெட் ரக வானூர்திகளில் 25ஐ உக்ரேனின் ஆகாயத் தற்காப்பு முறைகள் அழித்ததாக உக்ரேனிய தரைப் படைகள் கூறின. ஈரானில் உற்பத்தியான ஷாஹெட் வானூர்திகள், குறிப்பாக கியவ் நகரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் குறிவைத்து பாய்ச்சப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கியவ்வின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது ஐந்து முறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ராய்ட்டர்சிடம் கூறினர். உக்ரேனிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளிலும் படங்களிலும் பல வாகனங்கள் சேதமடைந்தது தெரிந்தது.
கியவ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொடில் குடியிருப்புப் பகுதியில் ஒருவர் காயமுற்றதாக அந்நகர மேயர் விட்டாலி கிலிட்ஷ்கோ சொன்னார். நகரின் பூங்கா ஒன்றுக்கு அருகே தீ மூண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷெவ்செங்கிவ்ஸ்கி, டார்னிட்ஸ்கி, சொலமியன்ஸ்கி உள்ளிட்ட வட்டாரங்களில் வானூர்தி சிதைவுகள் விழுந்ததாக கியவ் நகர ராணுவ நிர்வாகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஷெவ்செங்கிவ்ஸ்கியில் வானூர்தி சிதைவுகளால் ஓர் அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டது. எனினும், தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று கியவ் ராணுவ நிர்வாகத் தலைவர் சர்ஹெய் பொப்கோ டெலிகிராம் செயலியின்வழி தெரிவித்தார்.
தாக்குதல்கள் குறித்து ரஷ்யா கருத்து வெளியிடவில்லை.

