டஃபெகாட்டே: மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படும் வேளையில், தொலைதூர கிராமங்களைச் சென்றடைய ராணுவப் படைகளும் அவசர சேவைகளும் வேகமாகச் செயல்பட்டு வருகின்றன.
தேசிய அளவில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அனைத்து அரசாங்கக் கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைச் சரிசெய்ய பல ஆண்டுகள் தேவைப்படலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான மராகேஷ் நகருக்கு தென்மேற்கே 72 கி.மீ. தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என அது பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
கரையோர நகர்களான ரபாத், கசபிலங்கா, எசவ்ராவிலும் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டன. குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் பின்னிரவில் பாதுகாப்பைத் தேடி அலைமோதினர்.
நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு அருகே உள்ள மலைக் கிராமமான டஃபெகாட்டேயில் எந்தவொரு கட்டடமும் சேதத்திலிருந்து விட்டுவைக்கப்படவில்லை.
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவை உலுக்கிய ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட தகவலில், நிலநடுக்கத்தால் குறைந்தது 2,012 பேர் உயிரிழந்ததாகவும் 2,059 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 1,404 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று அமைச்சு கூறியது.
சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துத் தவிக்கும் மொரோக்கோ மக்களுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
அண்டை நாடான அல்ஜீரியா, தனது வான்வெளியில் அனைத்து மொரோக்கோ விமானச் சேவைகளுக்கும் விதித்திருந்த ஈராண்டுத் தடையைத் தற்காலிகமாக நீக்கியது. இதன்மூலம் மொரோக்கோவுக்கு மருத்துவ உதவிகளை அது வழங்க முடியும்.

