மராகேஷ்: மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது இரவைப் பல குடும்பங்கள் பொதுவெளியில் கழித்தன.
வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தால் பலரும் அங்கு திரும்பத் தயங்கினர். நிலநடுக்கத்திற்குப் பிந்திய நில அதிர்வுகள் ஏற்படுமோ என்ற பீதியிலும் அவர்கள் இருந்தனர்.
நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு வடகிழக்கே 70 கி.மீ. தூரத்தில் உள்ள மராகேஷில் நிலையற்ற சூழலால் பலரும் தவிக்கின்றனர்.
தமது வீட்டுச் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த முகம்மது ஆயத் எல்ஹாஜ், 51, தம் குடும்பத்தாருடன் வீதிகளில் உறங்கினார்.
“என்னால் வீட்டில் உறங்க முடியாது. எனது வீட்டிற்குத் திரும்புவது பாதுகாப்பானதா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு நிபுணர் ஒருவரை அழைத்துவர அதிகாரிகளிடம் நான் கேட்டுள்ளேன். அபாயம் நிலவினால் நான் வீட்டிற்குத் திரும்ப மாட்டேன்,” என்று ராய்ட்டர்சிடம் அவர் கூறினார்.
மொரோக்கோவாசிகள், வெளிநாட்டவர்களிடையே பிரபலமான சுற்றுலாத் தலமான மராகேஷின் வரலாற்றுச் சிறப்புமிக்க மெதினாவின் சில பகுதிகள் நிலநடுக்கத்தால் சேதமுற்றன. சனிக்கிழமை மக்கள் சிலர் சேதத்தைப் புகைப்படம் எடுத்தனர்.
அங்குள்ள பிரபல உணவகங்களில் சிலர் உணவருந்த, பிரதான சதுக்கத்தில் உறங்க மற்ற சிலர் திரண்டனர்.

