தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து: பொருளியலை முடுக்கிவிட $21 பில்லியன் ரொக்க வழங்கீட்டுத் திட்டம்

2 mins read
7543425a-b3dc-4ec8-9980-92dac6e7ea57
படம்: - தமிழ் முரசு

பேங்காக்: தாய்லாந்துப் பொருளியலை மந்தநிலையிலிருந்து மீட்பதை தனது தலையாய பணியாக கருதும் அந்நாட்டின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், அடுத்த ஆறுமாத காலத்தில் 560 பில்லியன் பாட் ($21 பில்லியன்) பெறுமானமுள்ள திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 55 மில்லியன் மக்களுக்கு ரொக்க வழங்கீடு கிடைக்கும். இது உள்நாட்டில் பொதுமக்கள் இடையே வாங்கும் சக்தியையும் தேவையையும் அதிகரித்து முதலீடுகளையும் பெருக்கும் என்று புதிய பிரதமர் நம்புவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின்படி, 16 வயதடைந்த அனைத்து தாய்லாந்து நாட்டவருக்கும், தாங்கள் வசிக்கும் அக்கம்பக்கங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட பொருள்கள் வாங்க, சேவையைப் பெற, 10,000 பாட் வழங்கப்படும்.

மேலும், திங்கட்கிழமை அரசாங்கக் கொள்கை அறிக்கையை வெளியிட்ட திரு ஸ்ரேத்தா, விரைவில் அரசு எரிசக்திக் கட்டணத்தை குறைக்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், கடன் சிக்கலில் தவிக்கும் விவசாயிகளும் சிறு தொழில் செய்பவர்களும் தங்கள் கடனை மெதுவாக அடைக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

இத்திட்டத்துக்கு மின்னிலக்க பணப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளியலை தட்டி எழுப்பும் என்று திரு ஸ்ரேத்தா கூறினார். மேலும், இந்த ரொக்க வழங்கீடு பொருளியலின் அனைத்துத் துறைகளுக்கும் பணம் சரிசமமாக செல்வதை உறுதி செய்யும் என்றும் அவர் விளக்கினார்.

இந்நிலையில், திரு ஸ்ரேத்தா தலைமையில் புதன்கிழமை கூடும் அமைச்சரவை அவர் வரைந்துள்ள பொருளியல் திட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரு ஸ்ரேத்தா தலைமை தாங்கும் பியூ தாய் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மின்னிலக்க பணப்பை திட்டம் அடுத்த மூன்று மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது பல மடங்கு பெருகி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் அடுத்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 5 விழுக்காடு வரை இருக்கும் என்றும் பியூ தாய் கட்சியும் அந்தக் கட்சி பிரமுகர்களும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

நில மேம்பாட்டு சொத்துத் துறையைச் சேர்ந்த திரு ஸ்ரேத்தா புதிய தாய்லாந்து அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் செயல்படுகிறார். தாய்லாந்துப் பொருளியலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சவாலை இவர் எதிர்நோக்குகிறார். அத்துடன் அண்மைய காலமாக முக்கிய பங்காளி நாடான சீனா, தாய்லாந்துப் பொருள்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது. மேலும், சுற்றுப்பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவது தாய்லாந்துக்கு கவலை தரும் மற்றொரு அம்சமாகும்.

பதினொரு கட்சிக் கூட்டணியைக் கொண்ட தாய்லாந்து அரசு, விலைவாசி உயர்வு என்ற மற்றொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், திங்கட்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்ரேத்தாவின் பொருளியல் கொள்கையில் தெளிவில்லை என்றும் தேர்தலில் வழங்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறைகூறினர்.