ஒன்பது மணிநேரம் காரில் தனித்திருந்த இரண்டு வயதுச் சிறுவன் மரணம்; பாட்டி கைது

2 mins read
8a72ebe3-fffa-4992-afb5-4349d58e6c5d
படம்: - தமிழ் முரசு

தோக்கியோ: ஜப்பானின் சுயாமா நகரில் ஒன்பது மணிநேரம் காரில் தனித்து விடப்பட்ட இரண்டு வயதுச் சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இதன் தொடர்பில் சிறுவனின் பாட்டி செட்சுகோ ஷிபாட்டா என்ற 53 வயது மாது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பராமரிப்பு ஊழியராகப் பணிபுரியும் அந்தப் பாட்டி ஹருட்டோ மிசே என்ற அந்தச் சிறுவனை காரில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக ஜப்பானின் ஒக்காயாமா மாநிலக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது பற்றிக் கூறிய அவர், தமது பேரன் ஷிபாட்டா காரில் இருந்ததைத் தான் மறந்துவிட்டதாக காவல்துறையினரிடம் சொன்னதாக ஜப்பானின் அசாஹி ஷிம்புன் செய்தித்தாள் விளக்கியது.

எனினும், காவல்துறையை மேற்கோள்காட்டிய யோமியுரி ஷிம்புன் செய்தித்தாள், சிறுவனின் பாட்டி அந்தச் சிறுவனை பகல்நேர பராமரிப்பு மையத்தில் இறக்கிவிட மறந்துவிட்டதாக கூறினார் என்று தெரிவித்துள்ளது.

அந்தச் சிறுவன், காரில் உள்ளூர் நேரப்படி, காலை 8.15 மணியிலிருந்து மாலை 5.40 வரை விடப்பட்டதாக அசாஹி ஷிம்புன் பத்திரிகை தெரிவித்தது.

சிறுவனின் பாட்டி ஓட்டிவந்த கார் அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் மேலும் கூறியது.

சிறுவன் காரில் இருந்த சமயம் வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ் பதிவானதாக யோமியுரி ஷிம்புன் செய்தித்தாள் ஜப்பானின் வானிலை மையத்தை கோடிகாட்டி தெரிவித்தது.

இந்தச் சம்பவம் நடந்த அன்று திருவாட்டி ஷிபாட்டா தம் பேரன் மிசேயை பகல் நேரப் பராமரிப்பு மையத்தில் விடவேண்டியிருந்தது. ஆனால், அதற்கு பதிலாக அவர் நேராக மருத்துவமனைக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.