தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் புதிய வரிகள் பரிசீலிக்கப்படலாம்

2 mins read
2700fdf2-ab13-4088-9c07-05445d6be82f
மலேசியாவின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பதை பிரதமர் அன்வார் இப்ராகிம் கோடி காட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையைக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்க மலேசியா இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அந்த இலக்கை எட்டவும் வருவாயைப் பெருக்கவும் கூடுதல் வரிகள் பற்றி பரிசீலிக்கப்படுவதாக திரு அன்வார் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

நிதி அமைச்சருமான திரு அன்வார் மலேசிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான பொருளியல் திட்டம் மீதான இடைப்பருவ மறுஆய்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், வரிக்கட்டமைப்பை மலேசியா விரிவாக்கும் என்றார்.

“வரிகளுக்கான வழிவகைகளை பன்மயப்படுத்துவதோடு தொழில்நுட்பம் மூலம் வரிவிதிப்பு முறையை மேம்படுத்துவதன் மீதும் நாடு கவனம் செலுத்தும்,” என்றும் திரு அன்வார் கூறினார்.

அடுத்த ஆண்டு கொண்டுவரப்பட பரிசீலிக்கப்படும் புதிய வரிகளுள் மூலதன ஆதாய வரியும் ஒன்று என்று தெரிவித்த அவர் அதுபற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

திரு அன்வார் பிரதமர் பொறுப்புக்கு வருமுன்னர் முன்னாள் ஆட்சியாளர்களால் 12வது மலேசிய வளர்ச்சித் திட்டம் என்னும் ஐந்தாண்டுத் திட்டம் 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2025 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மலேசியப் பொருளியல் குறைந்தபட்சம் 5 விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காலகட்டத்திற்குள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5 விழுக்காடு அளவுக்கு வரவுசெலவுத் திட்ட இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய் செலவினம் பற்றாக்குறையை 6.4 விழுக்காட்டுக்கு அதிகரித்துவிட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு அது சற்று குறைந்து 5.6 விழுக்காடு ஆனது. அதேநேரம், கடன் உச்சவரம்பை உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 60 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காட்டுக்கு அரசாங்கம் உயர்த்தியது.

இந்நிலையில், புதிய வரிகள் குறித்து திரு அன்வார் சுட்டிக்காட்டியதற்குப் பிறகு பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி தமது கருத்தை வெளியிட்டார்.

“இதர வருவாய் இனங்களுக்கான தெரிவுகளை தொடர்ந்து ஆராய்வோம். அவை நேரடி வரிகளாகவோ மறைமுக வரிகளாகவோ இருக்கலாம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்