ஆகச்சிறிய வாகனப் பதிவெண்: வாகனமோட்டிக்கு அபராதம்

1 mins read
b19e03c1-7d07-4dec-a350-96a6938f14cf
கைவிரல் அளவுக்கு சின்னஞ்சிறிய எழுத்துகளுடன் வாகனப் பதிவெண் பலகை இருப்பதை அதிகாரி சுட்டுகிறார். - படம்: மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை/ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: கைவிரல் அளவுக்கு சின்னஞ்சிறிய பதிவெண் பலகையை மோட்டார்சைக்கிளில் பொருத்தியதற்காக வாகனமோட்டி ஒருவருக்கு மலேசிய காவல்துறை அபராதம் விதித்து உள்ளது.

இது தொடர்பான தகவல் ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறை செப்டம்பர் 2ஆம் தேதி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது.

ஷா ஆலம், சைபர்ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் போக்குவரத்து விதிமீறல்களை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டு இருந்தபோது அந்த மோட்டார்சைக்கிள் அவர்களின் பார்வையில் பட்டது.

கிட்டதட்ட நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் அளவுக்கு பதிவெண்கள் ஆகச் சிறியதாக அந்தப் பலகையில் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

‘உலகின் ஆகச் சிறிய பதிவெண் பலகை’ என்று இணையவாசிகள் பலரும் அதனைக் குறிப்பிட்டனர்.

கார் மற்றும் வாகனங்களுக்கான பதிவெண் பலகையில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்துகொள்ள மலேசிய அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்.

ஆயினும், இந்த அளவுக்குச் சிறியதாக மாற்றுவது சட்டவிரோதம். அதற்கு 300 ரிங்கிட் (S$88) முதல் 3,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியும். பிடிபட்ட வாகனமோட்டிக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

இவரைப்போலவே ஏற்கத்தகாத வார்த்தைகள் எழுதப்பட்ட பதிவெண் பலகை பொருத்தியதற்காக மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதாக ‘சினார் டெய்லி’ குறிப்பிடுகிறது.

மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி, ‘உன்னை நேசிக்கிறேன்’ (love you) என்ற வாசகங்களை பதிவெண் பலகையில் எழுதியிருந்ததற்காக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்