தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நஜிப் வழக்கு தள்ளுபடி தொடர்பாக மலேசியா மேல்முறையீடு செய்யவில்லை

2 mins read
d2acedff-eaf1-45f7-a086-75346654a8f1
நஜிப் ரசாக். - படம்: தி மலாய் மெயில்

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பாக கணக்குத் தணிக்கையை மாற்றி அமைத்தது குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மலேசிய அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு இது பின்னடைவாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு எதிரான பல ஊழல் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. டாக்டர் ஸாஹிட்டின் அம்னோ, அன்வார் தலைமையின்கீழ் செயல்படும் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

ஆளுங்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமென்றால் அம்னோ அதிலிருந்து விலகாமல் இருப்பது முக்கியம்.

எனவே, தொடர்ந்து ஆட்சி கவிழாமல் இருக்க டாக்டர் ஸாஹிட் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

இதனால், ஆளுங்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் திரு அன்வாருக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

திரு அன்வாரின் ஆளுங்கூட்டணியிலிருந்து விலகுவதாக மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தது.

நஜிப் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

இந்நிலையில், நஜிப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அரசாங்கம் எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.

1எம்டிபி தொடர்பான வேறொரு வழக்கு சம்பந்தமாக 70 வயது நஜிப் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்