மாஸ்கோ: வடகொரியா துணைக்கோளங்களை உருவாக்க ரஷ்யா உதவும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் புதன்கிழமை அறிவித்தார்.
ஆயுத விநியோகம் பற்றி வடகொரியத் தலைவருடன் விவாதிப்பீர்களா என்று கேட்டதற்கு அனைத்தையும் பற்றி பேசுவோம் என்று அவர் ரஷ்யாவின் தூரக் கிழக்கு விளாடிவஸ்டாக் நகரில் அந்தச் சந்திப்புக்கு முன்னதாகத் தெரிவித்தார்.
வடகொரியத் தலவைர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மிக அதிக பாதுகாப்பு உள்ள ரயில் மூலம் தூரக் கிழக்கு ரஷ்யாவுக்குச் சென்றார்.
ரயில் நிலையத்தில் அவருக்கு இசையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு அவர் ரஷ்ய அதிபரைச் சந்தித்தார். தூரக் கிழக்கு ரஷ்யாவில் உள்ள அமூர் வட்டாரத்தில் அமைந்து இருக்கும் ரஷ்யாவின் அதிநவீன உந்துகணை ஏவுதளத்தை வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபர் சுற்றிக் காட்டினார்.
வடகொரியாவுக்குத் துணைக்கோள தொழில்நுட்பத்தில் ரஷ்யா உதவும், அந்த நுட்பங்களில் வடகொரியா மிகவும் நாட்டமாக இருக்கிறது.
இதனால்தான் வடகொரிய அதிபர் ரஷ்யா வந்திருக்கிறார் என்று அதிபர் புட்டின் கூறினார்.
ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று கிம் ரஷ்யா சென்று இருக்கிறார். மொழி பெயர்ப்பாளர் மூலம் இருவரும் பேசிக் கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இரு தலைவர்களும் சந்தித்தபோது 40 வினாடி நேரம் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
ரஷ்யாவையும் வடகொரியாவையும் அனைத்துலக நாடுகள் ஒதுக்கி வைத்து வருகின்றன.
இந்த நிலையில், இரு தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன.
ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடக்கூடும். தற்காப்பு தொழில்நுட்பங்களைப் பரிமாறிக்கொள்ளக் கூடும் என்று அமெரிக்கா சந்தேகப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்குவது பற்றி வடகொரிய அதிபர் கிம்-புட்டின் இருவரும் விவாதிப்பார்கள் என்று அமெரிக்காவும் தென்கொரியாவும் கவலை தெரிவித்து இருக்கின்றன.
ஆனால், அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை என்று ரஷ்யாவும் வடகொரியாவும் மறுத்து இருக்கின்றன.
இரு தலைவர்களும் சந்தித்தபோது வடகொரியாவின் ராணுவம் இரண்டு அணு ஏவுகணைகளை மேலே பாய்ச்சியது.
அந்த ஏவுகணைகள் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகே உள்ள ஓரிடத்தில் இருந்து கிழக்கு கடலை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய ராணுவமும் ஜப்பானிய அரசாங்கமும் தெரிவித்தன.
வடகொரியத் தலைவர் வெளிநாடு சென்றிருக்கையில் அந்த நாடு முதன்முதலாக இப்போதுதான் அணு ஏவுகணையைப் பாய்ச்சி இருக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
புட்டின்-கிம் சந்திப்பிற்கு முன் அது பற்றி கேட்டபோது கருத்து கூறிய ரஷ்யப் பேச்சாளர், இரு நாடுகளும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைக்கும். அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டதாக இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இப்போதைய புவிசார் அரசியல் மாற்றங்களை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் புட்டின்-கிம் இருவரின் பேச்சுவார்த்தை மிக முக்கியமானவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.