உலகெங்கும் வறுமையில் வாடும் 333 மில்லியன் குழந்தைகள்

உலகெங்கும் வறுமையில் வாடும் 333 மில்லியன் குழந்தைகள்

2 mins read
b298f369-bd7b-4e7c-8e68-0ba4e37ce933
உலக அளவில் ஆறில் ஒரு குழந்தை நாளொன்றுக்கு 2.15 அமெரிக்க டாலரில் உயிர் வாழ்வதாக யுனிசெஃப் கூறுகிறது. - படம்: பிக்சாபே
multi-img1 of 2

வாஷிங்டன்: உலகெங்கும் 333 மில்லியன் குழந்தைகள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல், சிறுவர்களை வறுமையிலிருந்து மீட்கும் முயற்சியை மெதுவடையச் செய்துள்ளது. புதன்கிழமை (செப்டம்பர் 13) நிதியம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் ஆறில் ஒரு குழந்தை நாளொன்றுக்கு 2.15 அமெரிக்க டாலரில் (S$2.93) உயிர் வாழ்வதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று, போர், பருவநிலை மாற்றம், பொருளியல் வீழ்ச்சி போன்ற பல்வேறு நெருக்கடிகளால் மில்லியன்கணக்கான குழந்தைகள் இன்னும் கடுமையான வறுமையை எதிர்கொள்வதாக யுனிசெஃப் சொல்லிற்று.

கிருமிப் பரவலால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகளை கடுமையான வறுமையிலிருந்து மீட்க முடிந்ததாகக் கருதப்படுகிறது. அந்த இடையூறுகள் இல்லாவிட்டால் மேலும் 30 மில்லியன் குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கக்கூடும்.

ஐக்கிய நாட்டு நிறுவனம் 2030க்குள் சிறுவர்களிடையே கடுமையான வறுமையை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை அத்திட்டத்திற்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உலகில் 333 மில்லியன் குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமல், வாய்ப்புகளை, நம்பிக்கையை இழந்து நிற்பது சகித்துக்கொள்ள இயலாததாக இருக்கிறது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கேயுள்ள பகுதிகளில் வாழும் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. உலகின் இதர பகுதிகளை ஒப்பிடுகையில் ஆக அதிக விகிதம் இது.

வெகுவேகமாக அதிகரிக்கும் மக்கள்தொகை, கொவிட்-19 கிருமிப் பரவல், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவை அங்கு அண்மை ஆண்டுகளில் நிலைமையை மோசமாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறார் வறுமையில் வாடும் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு உலக நாடுகள் முன்னுரிமை தரவேண்டும் என்று உலக வங்கியும் யுனிசெஃப்பும் கேட்டுக்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்