தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 மாத உச்சத்தைத் தொடும் எண்ணெய் விலைகள்

2 mins read
8b63e38e-7ae7-4704-9385-a89d99a70aab
எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை ஏறக்குறைய 2 விழுக்காடு உயர்ந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை ஏறக்குறைய 2 விழுக்காடு உயர்ந்தன.

பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் 1.6 விழுக்காடு அல்லது $1.42 அமெரிக்க டாலர் அதிகரித்து, ஒரு பீப்பாய் $92.06 டாலராக இருந்தது. யுஎஸ் வெஸ்ட் டெக்சஸ் இண்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 1.8 விழுக்காடு அல்லது $1.55 டாலர் அதிகரித்து $88.84 டாலரை எட்டியது.

சென்ற 2022 நவம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிகமான விலை.

இந்நிலையில், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் எண்ணெய்க்கான தேவை உலகெங்கிலும் வலுவான வளர்ச்சி காணும் என்ற முன்னுரைப்பை ஓபெக் (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு) நிலைநாட்டியது.

ஓபெக் வெளியிட்ட மாதாந்தர முன்னுரைப்பின்படி, எண்ணெய்க்கான தேவை 2024ல் ஒரு நாளுக்கு 2.25 மில்லியன் பீப்பாய் அதிகரிக்கும்.

ஓபெக்கின் மாதாந்தர முன்னுரைப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்திருப்பதாக ஒயாண்டா தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் மூத்த சந்தை பகுப்பாய்வாளர் எட்வர்ட் மோயா குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சவூதி அரேபியாவும் ர‌‌ஷ்யாவும் எண்ணெய் விநியோகக் குறைப்பை ஆண்டிறுதி வரை நீட்டிப்பதாகச் சென்ற வாரம் அறிவித்தன. இவ்விரு நாடுகளும் மொத்தமாக ஒரு நாளுக்கு 1.3 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளன.

ஓபெக் உறுப்பினரான லிபியா, கடுமையான புயலால் கிழக்கு வட்டார எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் நான்கை மூடியுள்ளது. கசக்ஸ்தான் பராமரிப்புப் பணிக்காக அன்றாட எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கணிப்புப்படி, உலகின் எண்ணெய் உற்பத்தி 2024ல் ஒரு நாளுக்கு 102.9 மில்லியன் பீப்பாயாக அதிகரிக்கும். அதே வேளையில், எண்ணெய்க்கான தேவை 2024ல் ஒரு நாளுக்கு 102.3 மில்லியன் பீப்பாயை எட்டும்.

ஐரோப்பிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதத் தீர்மானத்தை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து, எண்ணெய்க்கான தேவை குறையும்.

குறிப்புச் சொற்கள்