தோக்கியோ: ஜப்பானியரான தோக்கோவுக்கு ‘கோலி’ வகை நாய்களை மிகவும் பிடிக்கும்.
எனவே அந்த நாயைப்போலக் காட்சியளிக்க உதவும் ஆடையை ஒரு நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைத்து அணிந்துகொள்கிறார்.
தற்போது அதை அணிந்தபடி நான்கு ‘கால்’களால் நடந்து வெளிப்புறங்களுக்கும் சென்றுவருகிறார்.
ஒரு விலங்கைப்போல் வாழ வேண்டும் என்பது தோக்கோவின் நீண்டநாள் ஆசை. அந்த ஆசையின் உந்துதலால்தான் இப்படி ‘நாய் ஆடை’ அணிந்து வலம்வருவதாக அவர் கூறினார்.
புதிதாக அவருக்கு சில ஆசைகள் தோன்றியுள்ளன. ‘நாய் ஆடையை’ அணிந்தபடி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது அதில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்த இயலும் என்கிறார்.
மற்றொன்று தன்னைப்போலவே நாய்ப் பிரியரான பெண்ணைத் துணையாக அடைவது. அந்தப் பெண்ணும் ‘நாய் ஆடை’ அணிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்கிறார் தோக்கோ. அத்தகைய ஒரு பெண்ணைச் சந்திக்க ஆவலோடு காத்திருப்பதாகச் சொல்கிறார் இவர்.
நான்கு ‘கால்’களில் நடப்பது சிரமமாக இல்லையா என்று கேட்போரிடம், “சிரமம்தான். இருப்பினும் இதன்மூலம் கிடைக்கும் மன நிறைவு அதைவிடப் பெரிது,” என்கிறார் தோக்கோ.


