சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மலேசியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இனி போக்குரவரத்து நெரிசலைக் குறைக்க சிங்கப்பூர் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
உட்லண்ட்ஸ் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மலேசியக் குடிநுழைவுத் துறை, மலேசிய சுங்கத் துறை, இதர அமைப்புகள் ஆகியவற்றின் முயற்சிகளை திரு அன்வார் பாராட்டினார்.
“ பெருமளவிலான மாற்றங்களைக் காண்கிறோம். சில வாரங்களுக்கு முன்பு நான் ஜோகூர் பாருவில் இருந்தேன். உட்லண்ட்ஸ் பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இனி சிங்கப்பூர் அதன் பங்கை ஆற்ற வேண்டும்,” என்று சிங்கப்பூரில் நடைபெறும் மில்கன் பயிற்சிக்கழக ஆசிய உச்சநிலை மாநாடு 2023ல் கலந்துகொண்ட திரு அன்வார், மலேசிய நாளிதழான சினார் ஹரியானின் செய்தியாளர்களிடம் கூறினார்.
அண்மையில் ஜோகூரில் உள்ள சிறப்புப் பொருளியல் மண்டலத்தைப் பற்றி திரு அன்வார் அறிவித்திருந்தார்.
அதுகுறித்து பேசிய திரு அன்வார், சிறப்புப் பொருளியல் மண்டலம் துவாஸ் சோதனைச்சாவடியுடன் தொடர்புடையது என்பதால் உட்லண்ட்ஸ் பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் ஜோகூர் பாருவில் வசித்துக்கொண்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.

