லண்டன்: இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரிலுள்ள தனது கடையில் திருட்டுப்போகும் கருவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதாகச் சொல்கிறார் திரு நீல் மெக்கே.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை $1,700 மதிப்புள்ள குறடுகள் களவாடப்பட்டன. கண்காணிப்பு கேமராவில் பதிவான திருடர்களின் படங்களை ஒரு சுவர் முழுவதும் அவர் மாட்டி வைத்திருக்கிறார்.
இந்த நிலைமை இவருக்கு மட்டுமல்ல. பிரிட்டன் முழுவதும் கடைத்திருட்டு பரவலாகி வருகிறது. இதனால் கடைக்காரர்கள் வெற்றுப் பெட்டிகளைக் காட்சிக்கு வைக்கின்றனர், இரகசியப் பாதுகாவலர்களை வேலைக்குச் சேர்க்கின்றனர், ஊழியர்களைக் கண்காணிப்பு கேமரா அணியச் செய்கின்றனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்கூட கடைத்திருட்டால் கடைக்காரர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திருடர்கள், டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் திருட்டு உத்திகளைப் பகிர்வதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டனில், கடைத்திருட்டுக் குற்றங்கள் இவ்வாண்டு கால்மடங்கு அதிகரித்திருப்பதாக தேசியப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மார்ச் வரையிலான 12 மாதங்களில் நடந்த எட்டு மில்லியன் கடைத்திருட்டுச் சம்பவங்களில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பவுண்டு மதிப்புள்ள பொருட்களைக் கடைக்காரர்கள் இழந்தனர்.
பிரிட்டனின் ஆகப்பெரிய கடைகள் சில, கடைத்திருட்டுக்கு எதிரான புதிய காவல்துறை நடவடிக்கைக்குக் கூட்டாக நிதியளிக்க சம்மதித்துள்ளன. - புளூம்பர்க்

