மாஸ்கோ: உக்ரேன் மீது ரஷ்யா, புனிதப் போர் தொடுத்துள்ளதாகவும் அதற்கு தான் முழு ஆதரவு வழங்கப்போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்து இருக்கிறார்.
ரஷ்யாவின் தூரக்கிழக்கு விளாடிவஸ்டாக் நகருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட வடகொரியத் தலைவர், அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்கள் சந்திப்பு பற்றி கூட்டறிக்கை வெளியிடவில்லை. என்றாலும் இரு தலைவர்களும் ராணுவம் தொடர்பில் முக்கியமாக விவாதித்ததாக பல்வேறு யூகங்கள் மூலம் தெரியவந்து இருக்கின்றன.
வடகொரியா மீது ஐநா விதித்து இருக்கும் தடைகளை ரஷ்யா இனிமேல் மிக முக்கியமானவையாகக் கருதாது என்ற உறுதியையும் திரு புட்டினிடம் இருந்து வடகொரியத் தலைவர் பெற்றுக்கொண்டார்.
வடகொரியாவுக்கு வரும்படி ரஷ்ய அதிபருக்கு திரு கிம் அழைப்பு விடுத்தார்.
வடகொரியா துணைக்கோளங்களை உருவாக்க ரஷ்யா உதவும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் புதன்கிழமை அறிவித்தார்.
வடகொரியத் தலவைர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மிக அதிக பாதுகாப்பு உள்ள ரயில் மூலம் தூரக் கிழக்கு ரஷ்யாவுக்குச் சென்றார்.
ரயில் நிலையத்தில் அவருக்கு இசையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிறகு அவர் ரஷ்ய அதிபரைச் சந்தித்தார். தூரக் கிழக்கு ரஷ்யாவில் உள்ள அமூர் வட்டாரத்தில் அமைந்து இருக்கும் ரஷ்யாவின் அதிநவீன உந்துகணை ஏவுதளத்தை வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபர் சுற்றிக் காட்டினார்.
வடகொரியாவுக்குத் துணைக்கோள தொழில்நுட்பத்தில் ரஷ்யா உதவும், அதில் வடகொரியா மிகவும் நாட்டமாக இருக்கிறது.
இதனால்தான் வடகொரிய அதிபர் ரஷ்யா வந்திருக்கிறார் என்று அதிபர் புட்டின் கூறினார்.
ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று கிம் ரஷ்யா சென்று இருக்கிறார். மொழி பெயர்ப்பாளர் மூலம் இருவரும் பேசிக் கொண்டனர்.
இரு தலைவர்களும் சந்தித்தபோது 40 வினாடி நேரம் கைகுலுக்கிக் கொண்டனர்.
இரு தலைவர்களும் சந்தித்தபோது வடகொரியாவின் ராணுவம் இரண்டு அணு ஏவுகணைகளை மேலே பாய்ச்சியது.
அந்த ஏவுகணைகள் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகே உள்ள ஓரிடத்தில் இருந்து கிழக்கு கடலை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய ராணுவமும் ஜப்பானிய அரசாங்கமும் தெரிவித்தன.

