மாஸ்கோ: ராபர்ட் ஷோனோவ் என்பவர் ரஷ்யாவில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் ஊழியர். அவரை அமெரிக்காவுக்கு வேவு பார்க்கும் நபர் என்று ரஷ்யா குற்றம் சுமத்தி இருக்கிறது.
இந்நிலையில், ராபர்ட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லி இரண்டு அமெரிக்கத் தூதரக ஊழியர்களை ரஷ்யா வெளியேற்றுகிறது.
தூரக் கிழக்கு ரஷ்ய நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ராபர்ட் ஷோனோவ் வேலை பார்த்து வந்தார்.
அவர் உக்ரேன் பிரச்சினை பற்றிய தகவல்களை அமெரிக்க அரசதந்திரிகளிடம் தெரிவித்து இருக்கிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அதை அமெரிக்கா மறுத்துவிட்டது.
ஜெஃப் செலின், டேவிட் பெர்ன்ஸ்டென் என்ற இரண்டு அமெரிக்க தூதரக ஊழியர்கள் ரஷ்ய குடிமகனான ராபர்ட் ஷோனோவுடன் தொடர்புகொண்டு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
செலினும் பெர்ன்ஸ்டெனும் ஏழே நாட்களுக்குள் ரஷ்யாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அமெரிக்கத் தூதரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சு கூறியது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சு, ரஷ்யாவின் செய்கைக்குப் பதிலடி கிடைக்கும் என்று எச்சரித்தது.

