கோலாலம்பூர்: மலேசியாவில் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக இந்த ஆண்டில் இதுவரையில் 400 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் இவ்வாறு தெரிவித்து இருப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் கூறியது.
மனிதவள அமைச்சின் தொழிலாளர் துறை 272 முதலாளிகளுக்கு மொத்தம் 2.17 மில்லியன் ரிங்கிட் (S$630,000) அபராதம் விதித்து இருக்கிறது.
அதேவேளையில், 128 முதலாளிகளுக்கு மொத்தம் 242,000 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றங்கள் விதித்தன.
ஊழியர்களின் சம்பளத்தைச் சட்டவிரோதமான முறையில் குறைப்பது உள்ளிட்ட பலவும் தொழிலாளர் சட்டங்களை மீறிய குற்றச்செயல்களில் உள்ளடங்கும் என்று அமைச்சர் கூறினார்.
இருந்தாலும் நிறுவனங்களின் பெயர்களை அவர் தெரிவிக்கவில்லை. அதேபோல, குற்றங்கள் பற்றிய விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
மலேசியாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அண்மைய காலத்தில் அமெரிக்கத் தடைகளை எதிர்நோக்கின. வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக பாதகமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதையொட்டி அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.