அமெரிக்காவின் மூன்று முக்கிய வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம்

அமெரிக்காவின் மூன்று முக்கிய வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம்

2 mins read
8a692f99-a7f7-4527-be21-092d3da58b3f
மிச்சிகனில் உள்ள ஃபோர்ட் ஆலைக்கு வெளியே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். - படம்: ஏஎஃப்பி

டெட்ராய்ட்: அமெரிக்காவின் மூன்று முக்கிய கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை காலை ஒரே சமயத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லரின் மூல நிறுவனமான ஸ்டெலண்டிஸ் ஆகிய மூன்றின் தொழிற்சாலைகளிலும் ஒரே சமயத்தில் வேலைநிறுத்தம் செய்வது இதுவே முதல்முறை என்று ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத் தலைவர் ‌ஷான் ஃபேன் கூறினார்.

தொழிலாளர்களின் வெளிநடப்பால் ஃபோர்ட் பிரான்கோ எஸ்யுவி வாகனம், ஜீப் ராங்லர், செவ்ரோலே கொலராடோ பிக்-ஆப் வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் தயாரிப்பு நின்றுபோனது.

தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இப்போதைக்கு ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் செய்யப்போவதில்லை என்றும், புதிய ஒப்பந்தங்கள் ஏற்கப்படாவிட்டால் மற்ற தெரிவுகள் ஆராயப்படும் என்றும் திரு ஃபேன் தெரிவித்தார்.

பழைய ஒப்பந்தம் காலாவதியாவதற்கு இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரமே இருந்த வேளையில், வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. மொத்தம் 12,700 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தால் ஒரு வாரத்தில் ஏறக்குறைய 24,000 வாகனங்களின் உற்பத்தி தடைபடும் என்று வாகன முன்னுரைப்பு நிறுவனத்தின் முன்னுரைப்பாளர் சாம் ஃபியோரானி கூறினார்.

பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால், ஓரிரு வாரத்தில் முழு அளவிலான வேலைநிறுத்தத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கம் 40 விழுக்காடு சம்பள உயர்வு கேட்கிறது. நிறுவனங்கள் 20 விழுக்காடுவரை சம்பள உயர்வு வழங்க முன்வந்துள்ளன. ஆனால், அதுவும் தொழிற்சங்கம் கேட்கும் முக்கிய அனுகூலங்கள் இல்லாமல்.

தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளால் செலவு வெகுவாக அதிகரிக்குமென்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதை திரு ஃபேன் நிராகரித்தார். இந்நிறுவனங்கள் பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்வதற்கும் நிர்வாகிகளின் சம்பளத்திற்கும் பல பில்லியன் டாலர் செலவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்