கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

2 mins read
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து ஸாஹிட் விடுவிக்கப்பட்டதை எதிர்த்துப் பேரணி
db16626f-ff97-4171-9026-4723ae56e116
பெர்சத்து உறுப்பினர் ஃபைசல் இஸ்மாயில் அஸிஸ், கம்போங் பாரு பள்ளிவாசலுக்கு வெளியே திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பு பேசுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, ஊழல் வழக்கில் மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 47 குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்த நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக தலைநகர் கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கானோர் சனிக்கிழமை போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கூட்டணிக் கட்சிகளான பாஸ், பெர்சத்துவின் ஆதரவாளர்களாவர்.

சனிக்கிழமை பகல் தொழுகைக்குப் பிறகு கம்போங் பாரு பள்ளிவாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டாங் வாங்கி மாவட்ட காவல் நிலையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக நடந்து சென்றனர்.

“ஸாஹிட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும். சீர்திருத்தம் அழிந்துவிட்டது,” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

‘மலேசியாவைக் காப்பாற்றுங்கள்’ என்று அழைக்கப்படும் அந்தப் பேரணி, பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் கழித்து நிறைவுபெற்றது.

போராட்டத்தில் பிரதான பேச்சாளராக விளங்கிய பெர்சத்து உறுப்பினர் ஃபைசல் இஸ்மாயில் அஸிஸ், மலேசியாவின் விதிமுறைகளுடன் கூட்டரசு விளையாடுவதாகக் குறைகூறினார்.

திரு ஸாஹிட் மீது அரசாங்கம் மீண்டும் விசாரணையைத் தொடங்கக் கோரி காவல்துறையிடம் புகாரளிக்க, பேரணி ஏற்பாட்டாளர்களைப் பின்தொடர்ந்து வருமாறு ஆர்பாட்டக்காரர்களிடம் திரு ஃபைசல் வலியுறுத்தினார்.

திரு ஸாஹிட் மீது வழக்கு தொடுக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை பூர்த்திசெய்யப்படாவிட்டால் கூடுதலான பேரணிகளுக்குத் திட்டமிடப்படும் என்று திரு ஃபைசல் எச்சரித்தார்.

இதற்கிடையே, இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அலாவுதீன் அப்துல் மஜித் வர்ணித்தார். அமைதி ஒன்றுகூடல் சட்டம் அத்துமீறப்பட்டதற்கான சாத்தியத்தை அவர் சுட்டினார்.

ஏறக்குறைய 850 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், விசாரணைக்கு உதவ தேவை ஏற்பட்டால் யாருக்கு வேண்டுமானாலும் காவல்துறை அழைப்பாணை விடுக்கலாம் என எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்