அமெரிக்காவில் குழந்தை மரணம்; போதைப்பொருள் தொடர்பிருப்பதாக சந்தேகம்

2 mins read
badefc7e-6a78-4929-acf8-79183812d4d8
இச்சம்பவம் நியூயார்க் நகரில் உள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நிகழ்ந்தது. - படம்: நியூயார்க்டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் மூன்று குழந்தைகள் மதிய உறக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் அவசர மருத்துவ உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட அந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் இருக்கும் ஆறு மாடிக் கட்டடத்துக்குச் சென்றனர்.

அப்போது ஒரு வயது குழந்தை, இரண்டு வயதுக் குழந்தை, எட்டு மாதக் கைக்குழந்தை என மூவர் நினைவிழந்த நிலையில் இருந்திருக்கின்றனர். இது போதைப்பொருள் தொடர்புடைய சம்பவம் என்ற சந்தேகம் மருத்துவ உதவியாளர்களிடையே உடனடியாக எழுந்தது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலிலிருந்து போதைப்பொருளை அகற்ற உதவும் ‘நார்க்கன்’ எனும் மருந்து கொடுக்கப்பட்டது.

பிற்பகல் 12 மணிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலிருந்து வீடு திரும்பிய வேறொரு குழந்தை வழக்கத்துக்கு மாறான முறையில் சோர்வாக இருப்பதை அவரின் தாய் கவனித்திருக்கிறார். அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நவம்பர் மாதம் தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிக்கலஸ் டொமினிச்சி எனும் அந்த இரண்டு வயதுக் குழந்தை வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையில் உயிரிழந்தது.

பாதிக்கப்பட்ட மற்ற மூன்று குழந்தைகள் சனிக்கிழமையன்று கவலைக்கிடமாக இருந்தனர் அல்லது சீராக இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஒருவரை விசாரித்தனர்.

நடுத்தரக் குடும்பங்களுக்கு நம்பகமான, கட்டுப்படியான விலையில் இயங்கும் குழந்தைப் பராமரப்பு நிலையங்கள் அமைவது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘ஃபென்டனில்’ போன்ற போதை மருந்துகளின் தவறான பயன்பாடு ஆகிய இரண்டு பெரும் சவால்களை அமெரிக்கா எதிர்நோக்கி வருகிறது. இச்சம்பவம் அதை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்