உக்ரேனுக்குத் தொலைதூர ஏவுகணைகளை வழங்குமாறு பைடனுக்குக் குரல்

உக்ரேனுக்குத் தொலைதூர ஏவுகணைகளை வழங்குமாறு பைடனுக்குக் குரல்

2 mins read
57601c84-2c35-46ec-ab76-fc77e44785fe
ஏடிஏசிஎம்எஸ் ஆயுதங்கள்மீது மீண்டும் கவனம் திரும்புகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிராகப் பதில் தாக்குதல்களை நடத்த தொலைதூர ஏவுகணைகளை வழங்கி உக்ரேனுக்கு உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குக் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கூறியுள்ளனர். அமெரிக்காவில் தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்துவதற்காக சேர்த்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களில் சிறிதளவு ஆயுதங்கள் மட்டுமே இதற்குத் தேவைப்படும் என்பது அவர்களின் வாதம்.

திரு பைடன், இன்னும் சில நாள்களில் வெள்ளை மாளிகையில் உக்ரேனியப் பிரதமர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தவிருக்கிறார்.

உக்ரேன் பல காலமாக ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ராணுவ உத்தி ஏவுகணைகளைப் பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. திரு பைடனும் திரு ஸெலென்ஸ்கியும் நடத்தவிருக்கும் சந்திப்பில் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள்மீது மீண்டும் கவனம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ரஷ்யாவின் போரிடும் ஆற்றலை உக்ரேன் பெரிய அளவில் முடக்கியுள்ளது. இப்போது நம்மிடையே இருக்கும் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளில் சிலவை மட்டுமே அந்நாட்டுக்குத் தேவைப்படும்,” என்று டாம் காட்டன், ரோஜர் விக்கர், சூசன் கொலின்ஸ், லின்ட்சே கிரஹாம் ஆகிய குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டனர்.

திரு ஸெலென்ஸ்கி வாஷிங்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும்போது அவர் கூடுதல் ஆயுதங்களைப் பெற கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் அவற்றில் அடங்கமாட்டா என்று அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்தது. அதிலிருந்து சுமார் 44 பில்லியன் டாலர் (60 பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள தற்காப்பு உதவியை அமெரிக்கா, உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்