தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூடான் மோதல்: பற்றி எரிகிறது தலைநகர்

1 mins read
8a9217c9-28e0-4b71-8dde-2c554fe92ccb
கார்த்தோமின் மத்திய வட்டாரத்தில் உள்ள ‘கிரேட்டர் நைல் பெட்ரோலிய’ நிறுவனக் கட்டடம் தீக்கிரையானது. - படம்: ஏஎஃப்பி

சூடான்: சூடானியத் தலைநகர் கார்த்தோமில் அதிவேக ஆதரவுப் படை எனும் துணை ராணுவப் படையினர், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ராணுவத் தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்கியிருக்கும் இடங்களைக் குறிவைத்து ராணுவமும் தாக்குதல் நடத்தியதில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக கார்த்தோம் குடியிருப்பாளர்கள் கூறினர்.

ராணுவத் தலைமையகத்தைச் சுற்றிலும் பல்வேறு ஆயுதங்களுடன் இரு தரப்பும் மோதிக்கொள்வதாகத் தெரிகிறது.

சென்ற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற மோதல், ஆகக் கடுமையானதாக இருந்ததாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

வெடிப்புச் சத்தம் கேட்டபோதெல்லாம் கட்டடங்களின் கதவுகளும் சன்னல்களும் ஆடியதாகக் கூறப்பட்டது.

சில கட்டடங்களுக்குத் தீ மூட்டப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

நீதி அமைச்சு, நாட்டின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘கிரேட்டர் நைல் பெட்ரோலிய’ நிறுவனக் கட்டடம் போன்றவையும் தீக்கிரையானதை சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் காட்டுகின்றன.

கட்டடங்களின் சன்னல்கள் சேதமடைந்திருப்பதையும் சுவர்கள் குண்டுகளால் துளைக்கப்பட்டதையும் சில படங்கள் காட்டுகின்றன.

சூடானில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கும் அதிவேக ஆதரவுப் படைகளுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. கிட்டத்தட்ட 7,500 பேர் இதில் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் மாண்டோர் எண்ணிக்கை அதிகம் என்று நிவாரண ஊழியர்கள் கூறுகின்றனர்.

மோதல்களில் சூடானின் 80 விழுக்காட்டு மருத்துவமனைகள் சேதமடைந்ததாகவும் மில்லியன்கணக்கானோர் பசியில் வாடுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்